”கருத்தே சொல்ல விடமாட்றாங்க”-பேனா நினைவுச் சின்ன கூட்டத்தில் கைகலப்பு – சீமான் பேசியதென்ன?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் மதிப்பிலான நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து எழுத்துத் துறைக்கு கருணாநிதி ஆற்றிய பணிக்கு மரியாதை அளிக்கும் விதமாக அவரது நினைவிடத்திற்கு பின்புறம் 360 மீட்டர் உட்புறமாக 134 அடி உயரத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்கக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிப்படி, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை விண்ணப்பித்திருந்த விண்ணப்பம் தற்போது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் உள்ளதால் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலுக்கு நடுவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம்: தமிழக அரசுக்கு மத்திய  அரசின் சுற்றுச்சூழல்துறை கடிதம்....
அதன்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தவல்லி தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர், மே 17, வணிகர் சங்கத்தினர், மீனவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்கேற்றனர்.
அப்போது மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசிய போது, “கருணாநிதிக்காக நினைவுச் சின்னம் தேவையா என்றால் கண்டிப்பாக தேவைதான். ஆனல சுற்றுச்சூழலை கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் உலகளவில் இந்திய பெருங்கடலின் வெப்பம்தான் கடல் மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை தடுக்க முடியாவிட்டாலும் வெப்பநிலையை குறைக்க வேண்டும்.
பேனா நினைவுச் சின்னம் கடலில் எழுப்புவதில் சிக்கல் இருப்பதை உணர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து இந்த திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசின் கொள்கை சார்ந்த முடிவுக்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பது முக்கியமானதுதான். இது வரவேற்கத்தக்கது.” என்று தெரிவித்திருக்கிறார்.
Image
இதேபோல மீனவ சங்கத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர், “இயல், இசை, நாடகம் ஆகியவற்றுக்கு பெரும் பங்காற்றிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். ஆகவே பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.” என்றிருக்கிறார். மேலும் வணிகர் சங்கம் சார்பில் பேசியவர்களும் பேனா நினைவுச் சின்னம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றிருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் பேசியபோது, “நினைவுச் சின்னம் கட்ட அரை ஏக்கர் பரப்பளவு இடம் தேவைப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். கூவம் கடலில் இணையும் இடத்தில் பேனா நினைவுச் சின்னம் அமையவுள்ளதால் மீன்கள் பெரிதளவில் பாதிக்கப்படும். மத்திய அரசின் உத்தரவுப்படி விதிவிலக்கான சூழலில் மட்டுமே கடற்கரையில் நினைவுச் சின்னம் வைக்க வேண்டும். ஆனால் இது அப்படியான சூழல் கிடையாது. கருணாநிதியின் பெருமைக்காக இதைக் கட்டினாலும் அவரது பெயரையேதான் கெடுக்கும்” எனக் கூறியிருக்கிறார்கள்.

மேலும் நாம் தமிழர், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சியினர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, “நினைவுச் சின்னம் வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கடலில் வைப்பதைதான் எதிர்கிறோம்” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். மேலும், கருத்துக்கேட்பு கூட்டம் என சொல்லிவிட்டு பேச அனுமதி மறுக்கிறார்கள் என்றும் சீமான் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இதனிடையே கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்ற போது கலைவாணர் அரங்கத்தில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.