பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. மொத்தமாக, இரண்டு பாகங்களாக வெளியாகியிருக்கும் இந்த ஆவணப்படம், முழுமையாக 2 மணிநேரம் ஓடக்கூடியவை. ஆனால், இதன் முதல் பாகம் வெளியான உடனே, இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசாங்கம் தடை விதித்தது. ஆனால், இதன் தடைதான் இந்த ஆவணப்படம் இன்னும் வீரியத்துடன் மக்களை சென்றடைவதில் பெரும் பங்காற்றியது என்னும் எண்ணும் அளவு இது பலரால் பதிவிறக்கம் செய்யப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது.
ஆவணப்படத்தின் சுருக்கம்!
இதில் 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு அப்போதைய மோடி அரசுதான் காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் சாட்சிகளும், இரண்டாம் பாகத்தில் மோடிக்கு எதிராக சாட்சி சொல்லிய அமைச்சர்கள், அதிகாரிகளும் இருக்கும் காட்சிகள் வெளிவந்துள்ளது. குறிப்பாக, அமைச்சரின் மர்மமான மரணம், ஐ.ஏ.எஸ் அதிகாரி சிறையில் அடைப்பு என அந்த கலவரத்தின் தொடர்ச்சியான சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது பதிவுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தொடக்கத்தில், கல்லூரி வளாகங்களின் உள்ளே ஆவணப்படம் தடையை மீறி திரையிடப்பட்டது. தற்போது அது பொதுவெளியிலும் அரசின் ஆதாரவுடன் திரையிடப்படுகிறதா? என்ற சந்தேகத்தை தூண்டும் வகையில் கேரளா, தமிழகம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பொது வெளியில் திரையிடப்பட்டு வருகின்றது.
அடிப்படை உரிமை மீட்டெடுப்பு!...
பிபிசி ஆவவணப்படம் வெளிவந்த சில நாட்களாக பத்திரிகைகளும், ஆர்வலர்களும் அது குறித்து பேசி வந்தனர். ஆனால், எப்போது அது மத்திய அரசால் தடை செய்யப்பட்டதோ, அந்த நொடியில் இருந்து ஆவணப்படம் பரவலாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. குறிப்பாக, மின்சாரம் துண்டிப்பு, இணைய சேவை முடக்கம் என அடுத்தடுத்து ஏற்பட்ட இடையூறு காரணமாக, ஆவணப்படம் திரையிடல் மேலும் தீவிரமானது.
விளைவாக, பொது வெளியிலும் சாதாரண மக்களும் பார்க்கும் வண்ணம் மாணவ அமைப்புகளால் திரையிடப்பட்டது. இன்னும் சில சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இணைப்பைப் பதிவிட்டு, “இந்த ஆவணப்படத்தை அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்” என பதிவிட்டனர்.
சிறுபான்மையினர் எதிர்க்கும் ஆட்சி!
பொதுவாக, பாஜக மீது ‘சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி’ என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதை மேலும் உறுதி செய்யும் வகையில் சிறுபான்மையினர் கல்வித் தொகை ரத்து, குறைப்பு என தொடர்ந்து அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டது. இந்த நிலையில், இந்த ஆவணப்படம் வெளியாகி இருப்பது அதை மேலும் உறுதி செய்திருக்கிறது என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். இதில் கூறியிருப்பது உண்மையா?… பொய்யா?… என்பதை கடந்து , இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வன்முறை சம்பவங்கள் உண்மை, யாராலும் மறுக்க முடியாது என்பதால், ஏற்கனவே பாஜக மீது இருக்கும் ‘சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி’ என்னும் முத்திரை இன்னும் அழுத்தமாகப் பதியும். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 20% இஸ்லாமியர்கள் மட்டுமே பாஜக-வுக்கு வாக்களித்தாகக் கூறப்படுகிறது (பியூ ஆராய்ச்சி மையம்) . இந்த ஆவணப்படத்தின் சர்ச்சை காரணமாக அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் வாக்கு மேலும் சரியும் என்றும் கணிக்கப்படுகிறது.
மத்திய அரசு தடை விதித்த ஆவணப்படத்தை மக்கள் அனைவரும் பார்ப்பது குற்றமாகுமா?… என்னும் கேள்வியை வழக்கறிஞர் சேகர் அண்ணாதுரையிடம் முன்வைத்தோம். அவர், “மத்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2021) சில திருத்தங்களை மேற்கொண்டது. அந்தத் திருத்தம் ‘அவசர கால அதிகாரத்தை’ அந்த சட்டத்துக்கு வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி, பிபிசி ஆவணப்படத்தைத் தடை செய்திருக்கிறது மத்திய அரசு. ஆனால், இது சட்டப்பிரிவு 19(1) – தனிமனிதரின் கருத்துரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி மக்கள் தடையை ஏற்க மறுத்து ஆவணபடத்தைப்பார்த்து வருகின்றனர். ” என்கிறார்.
மேலும் தொடர்ந்த அவர், ” 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரகால அறிவிப்பால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் அடிப்படை உரிமையை மறுக்கவோ தடைவிதிக்கவோ வேறு எந்த பிரிவுக்கும் உரிமையில்லை என தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் பார்த்தால், இந்த ஆவணப்பட்டத்தை அரசு தடை செய்திருப்பதே கருத்துரிமை சுதந்திரத்திற்கு எதிரானது . ஒரு ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகளை அரசு பறிக்கிறது என்றும், எனவே அதற்கு எதிராகவும் உரிமையை மீட்டெடுக்க மக்கள் அனைவரும் அதைப் பார்க்க வேண்டும் என தீவிரம் காட்டுகின்றனர்”‘என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன், “2002-ம் ஆண்டு நடந்த நிகழ்வை ஏன் மறுவிசாரணை செய்து வெளியிட வேண்டும். அதற்கு என்ன தேவை இருக்கிறது?… என்னும் கேள்வியைப் பலர் கேட்கிறார்கள். ஆனால், சுதந்திர போராட்ட மரணங்கள் தொடங்கி, 1984-ல் நடந்த சீக்கியர்கள் படுகொலை என அனைத்தையும் வளர்ந்து வரும் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்படி அரசியல் சூழலில் நடந்த முக்கிய நிகழ்வாகத் தான் இந்த குஜராத் கலவரமும் இருந்தது. அதை அனைவரும் தெரிந்துகொள்வது தற்போது தேவையானது.
இதில் குற்றசாட்டப்பட்ட முதல்வர் தொடங்கி அதிகாரிகள் வரை என அனைவரையும் நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்து விட்டது. ஆனால் அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் , 2000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பாக மாட்டாரா?…என்னும் கேள்விதான் ஆவணப்படத்தின் வாயிலாகவும் கேட்கப்பட்டுள்ளது.
ஒருவர் தன்னையோ நாடு போற்றும் விஸ்வ குருவாக, பிரதமராக முன்னிறுத்தும் போது, எதன் பின்னணியாகக் கொண்டு இவர் அதிகார இருக்கையில் அமர்ந்திருக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். அதிகாரத்துக்கு வர ‘இந்து’ என்னும் கருவியை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதற்கு 1990-ம் ஆண்டு இவர்கள் நடத்திய ரத யாத்திரை பெரும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. ஆனால், இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்தது. இப்படியாக தங்களை இந்து காவலராக இவர்கள் கட்டமைத்த பிம்பம்தான் ஆட்சியில் அமர வைத்துள்ளது.” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், “2003-ம் ஆண்டு இந்தக் கலவரத்தையும் மீறி இந்துக்களுக்கு இவர்கள் இத்தனை செய்திருக்கிறார்களா?… என்னும் நம்பிக்கையில் மாநில மக்கள் பாஜக -வுக்கு வாக்களித்து குஜராத்தில் பெரும் வெற்றியைத் தந்தனர். இந்த ஆவணப்படத்தில் காட்டும் கொலைகள் தாக்குதல் அனைத்தும் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை என்பதை கடந்து, எந்த மதத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை மக்கள் கவனிக்கைன்றனர்.
எனவே இது அவர்கள் எதிர்பார்த்தைப் போல ‘இந்து வாக்குகளை நிச்சயம் கவரும்’. இதை உணர்ந்தால்தான், முதல் பாகம் வெளியான போது தடை என்னும் முடிவால் சற்று தடுமாறியது பாஜக. ஆனால், அடுத்த தேர்தலில் ‘இந்து வாக்கு உறுதி’ என்கிற அடிப்படையில், இரண்டாம் பாகத்தை பெரிதாக விமர்ச்சிக்கவில்லை. எனவே அடுத்த வரும் நாடாளுமன்ற தேர்தலில் இது பெரும்பாலான இந்து மக்களின் வாக்குகளை ஈர்க்கும் என்பதே என்னுடைய கணிப்பு,” என முடித்துக் கொண்டார்.