குஜராத் மாநிலம் மோர்பி பாலம் இடிந்து விழுந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேல், மோர்பியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் ஆற்றுப் பாலம் அறுந்து விழுந்த விபத்தில், 135 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்த வாரம் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய்சுக் பட்டேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
ஆங்கிலேயர் கால இந்தப் பாலத்தை பராமரிக்கும் பொறுப்பை ஓரேவா குழுமம் மேற்கொண்டது. விபத்துக்குப் பிறகு ஓரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேல் காணாமல் போனதாகவும் குற்றப்பத்திரிகையில் ‘தலைமறைவு’ என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது. மோர்பி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எம்.ஜே. கான், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் காவல்துறையிடம் பெறப்பட்ட கோரிக்கையின் படி, பட்டேலுக்கு எதிராக “கைது வாரண்ட்” பிறப்பித்திருந்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பட்டேல் முன்ஜாமீன் கோரி ஜனவரி 20ஆம் தேதி மோர்பி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால், விசாரணை பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 4 ஓரேவா குழும ஊழியர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, தொங்கு பாலத்தில் “முழு மற்றும் இறுதி” பழுதுபார்ப்புகளை மேற்கொண்ட கடிகார தயாரிப்பு நிறுவனமான ஓரேவா குழுமம், ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் ரூ.12 லட்சம் (அல்லது) ஆறு சதவீதத்தை மட்டுமே செலவிட்டதாக கூறப்படுகிறது. பாலத்தை பராமரிக்கவும் இயக்கவும் 15 வருட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றிருந்தது. இதற்கிடையில் ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிறகு இந்த பாலம் திறக்கப்பட்டது. “பாலம் குஜராத்தி புத்தாண்டில் திறக்க தயாராக உள்ளது மற்றும் பாதுகாப்பானது” என்று ஜெய்சுக் பட்டேல் அக்டோபர் 24 தேதி அன்று, பாலம் இடிந்து விழுவதற்கு சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM