கோவிட் தொற்றுப்பரவலுக்குப் பின்னர், தைவானில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக, தென்கிழக்கு ஆசியாவில் தொற்று ஏற்படுத்திய உளவியல் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகையே ஆட்டிப்படைத்த கோவிட் 19 பெருந்தொற்றானது, பொருளாதாரம், வர்த்தகம், மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது. மக்களை உடல்ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் அது பாதித்தது. இந்நிலையில், தைவானைச் சேர்ந்த நேஷனல் செங் குங் பல்கலைக்கழகத்தை (NCKU) சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, தென்கிழக்கு ஆசிய மக்கள் மத்தியில் கோவிட்-19 தொற்று ஏற்படுத்திய உளவியல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தெற்காசியாவின் சில பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், வெளிநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மீது தொற்றுநோயின் உளவியல் தாக்கம் உள்ளிட்டவை இதில் மதிப்பிடப்பட்டன.
ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) பங்களிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், ஃபிரான்டியர்ஸ் இன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், `கோவிட் வைரஸ் பரவலைத் தடுக்க, அரசுகள் லாக்டௌனை அமல்படுத்தின. இது, மக்களின் வாழ்க்கை முறையையும் சமூக நடத்தைகளையும் பெருமளவில் மாற்றியமைத்தது. இந்த மாற்றம், அவர்களின் உளவியல் சமூக பாதிப்புகளுடன் தொடர்புடையது. தொற்றுநோய் காலத்தில், முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுநோயின் உளவியல் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, ஆய்வுக்குழு தைவானில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வெளிநோயாளிகளுக்கு இடையிலான உளவியல் துயரம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடத்தைகளை, ஹாங்காங் மக்களின் மாதிரி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தது. ஹாங்காங்கில் இருந்து வந்தவர்கள் கோவிட்-19 குறித்து அதிக அச்சத்தில் இருந்ததை குழுவினர் கண்டறிந்தனர். உளவியல் துயரத்தைப் பொறுத்தவரை, தைவானிய வெளிநோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், ஹாங்காங்கில் உள்ளவர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வானது, 192 தைவானிய வெளிநோயாளிகள், 500 தைவானிய சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஹாங்காங்கில் உள்ள 1,067 பேரிடம் உளவியல் சிக்கல் மற்றும் பாதுகாப்பு நடத்தைகளை ஒப்பிட்டுப் பார்த்து மேற்கொள்ளப்பட்டதாக, ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் சுங்-யிங் லின் கூறினார்.