சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா
நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சில ஆண்டுகளுக்கு கணவர், குழந்தைகள் என இல்லத்தரசியாக மாறிப்போனார் ஜோதிகா. அதன்பிறகு 36 வயதினிலே படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜோதிகா, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்தவிதமாக தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் ; தி கோர் என்கிற படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது, படப்பிடிப்பு ஆரம்பித்தது, முடிந்தது என எல்லாமே அவ்வப்போது அப்டேட்டுகளாக வெளியாகி வந்தன.
அதே சமயம் இதுபோன்ற எந்த ஒரு பரபரப்பு அறிவிப்புகளும் இல்லாமல் சத்தமின்றி ஒரு பாலிவுட் படத்தில் நடித்து முடித்து விட்டார் ஜோதிகா. படத்தின் பெயர் 'ஸ்ரீ'. இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தற்போதுதான் இந்த தகவலையே வெளியிட்டுள்ளார் ஜோதிகா. இந்த படத்தை துஷார் என்பவர் இயக்க, ராஜ்குமார் ராவ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஜோதிகா கூறும்போது, “இதுவரை பணியாற்றிய சிறந்த படக்குழுவில் இதுவும் ஒன்று. பாலிவுட்டின் மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்ததை ஒரு பெருமையாகவே கருதுகிறேன். இந்தப் படக்குழுவினரிடம் இருந்து ஒரு நடிகையாக எதை எடுத்துக்கொண்டு போகிறேன் என்றால் அதுதான் 'வளர்ச்சி'” என்று கூறியுள்ளார்.
இவரது இந்த பதிவில் தனது கருத்தை பதிவிட்டுள்ள சூர்யா, “இந்த அற்புதமான பயணம் அனைத்து இதயங்களையும் வெல்லட்டும்” என்று கூறியுள்ளார்.