சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.
நாட்டின் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் சிங்கள கலாசார நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பேணுவதற்காக, கலாசார அமைச்சுக்கும் சிங்கள கலாசார நிறுவனத்திற்கும் இடையிலான ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சிங்கள கலாசார நிறுவனம் அமைந்துள்ள காணி தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்படி பணிப்புரைகளை வழங்கினார்.
இதன்போது சிங்கள கலாசார நிறுவனத்தைப் பராமரிப்பது தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
சிங்கள கலாசார நிறுவனம் அமைந்துள்ள காணியின் வர்த்தகப் பெறுமதி மிகவும் அதிகமாக உள்ளதனால், அந்த நிறுவனத்தின் கட்டட வசதிகளை மேம்படுத்தி, நிறுவனத்திற்கு ஏற்ற செயற்பாடுகளின் மூலம் வருமானத்தை ஈட்டுவதில் அதிக கவனம் செலுத்துமாறும், அதற்கு நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படுமாயின், கலாசார அமைச்சின் ஊடாக அதனை வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
சிங்கள கலாசார நிறுவனத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை தற்போது 300 ஆக இருப்பதாகவும், அங்கத்துவத்தை மேலும் விஸ்தரிப்பதன் ஊடாக படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் புதிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, சிங்கள கலாசார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜீவன் குமாரதுங்க மற்றும் சிங்கள கலாசார நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.