தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இன்னும் பலர் கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ள தன்பாத்தின் ஜோராபடாக் பகுதியில் உள்ள ஆஷிர்வாத் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் மாலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் தீ விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சரியான எண்ணிக்கையைச் சொல்ல முடியாது என்று தன்பாத் டிஎஸ்பி பேசியுள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய தன்பாத் காவல்துறை அதிகாரி ஒருவர், “திருமண நிகழ்ச்சி நடந்ததால் அதில் கலந்து கொள்வதற்காக பலர் அந்த குடியிருப்புக்கு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்புப் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறது” என்று தெரிவித்துளளார்.