தஞ்சாவூர் மாவட்டத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (39). இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார். இதையடுத்து அங்கு தரிசனம் செய்துவிட்டு காரில் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் அருகே திருவையாறு-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.