புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு “அம்ரித் உத்யன்” என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் முகலாயார் காலத்தின் நினைவுகளை அழிக்கும் முயற்சிக்கும் இந்த முடிவு தன்னிச்சையான, துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பினாய் விஸ்வம், குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், “இது போன்ற இடங்களின் பெயர்கள் நமது வரலாற்றின் குறிப்பிட்ட காலத்தின் வரலாறுகளை சித்தரிக்கின்றன. இந்திய வரலாற்றில் முகலாயர் காலம் அழிக்க முடியாத ஒன்று. ஒரு பெரும் சாம்ராஜ்யமாக, முகலாய அரசர்கள் நன்மை, தீமை என இரண்டு பக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதை மறுக்க முடியாது. இந்த உண்மை இந்து அரசர்களுக்கும் பொருந்தும்.
வரலாற்றில் இருந்து “முகல்” என்ற வார்த்தையை நீக்குவதை, இந்திய வரலாற்றை மீண்டும் எழுதி, தேசியத்தை மறுவரையறை செய்யும் ஒன்றாகவே பார்க்க முடியும். இந்த பெயர் மாற்றத்தினால் டெல்லி வரலாற்றின் மிக முக்கியமான அங்கம் ஒன்றை நாம் இழந்துவிட்டோம். உங்களைப் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள், இதுபோன்ற வகுப்புவாத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
எனவே, பெயர் மாற்றபட்ட முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக வரலாற்று ஆசிரியர்களையும் ஆய்வாளர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ மாளிகையில் உள்ள முகல் தோட்டம் உள்ளிட்ட 6 தோட்டங்களுக்கு அம்ரித் உத்யன் என்று பெயர் மாற்றினார். இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையின் அடையாளமாக அறியப்படும் அம்ரித் உத்யன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள “முகல் தோட்டம்” சுமார் 15 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது.
முன்னதாக மத்திய அரசு, தேசிய தலைநகரில் உள்ள ராஜ பாதையை, கடமைப் பாதை என்றும், ரேஸ் கோர்ஸ் சாலையை லோக் கல்யான் மார்க் என்றும், இந்தியா கேட் அறுங்கோண முக்கோண பகுதியில் உள்ள அவுரங்கசீப் சாலை முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பெயரையும் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.