மதுரை: தமிழகத்தில் கோயில்களின் பெயர்களில் செயல்படும் போலி இணையதளங்களை முடக்கவும், அதை நடத்துவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் முக்கிய கோயில்களின் பெயர்களில் செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அந்த இணையதளங்களை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
அதில் சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பழனி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் பெயரில் பலர் போலி இணையதளங்களை தொடங்கி பணம் வசூலிக்கின்றனர். அந்த இணையதளங்கள் கோயில் பெயர்களில் இருப்பதால் கோயிலுக்கு சொந்தமானது என நினைத்து மக்கள் பணம் வழங்குகின்றனர். இதுபோன்ற போலி இணையதளங்களை முடக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு முழுவதும் கோயில் பெயர்களில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான போலி இணைதளங்களை முடக்க வேண்டும். அந்த இணையதளங்கள் வழியாக எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை சைபர் கிரைம் போலீஸார் மூலம் கண்டறிந்து, அந்த தொகையை பறிமுதல் செய்ய வேண்டும். கோயில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரியை தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக பூஜைகள், நன்கொடை வழங்குவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் உண்டியல் வைத்து அதில் காணிக்கை செலுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக காணிக்கை செலுத்தவும் பக்தர்களை அறிவுறுத்த வேண்டும்.
போலி இணையதளங்கள் குறித்து புகார் வந்தால் உடனடியாக விசாரித்து போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, சபரிமலை கோயில்களை போல் தமிழக கோயில்களின் செயல்பாடுகள் முறையாக, வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.