தமிழக இளைஞர் ஒருவரை வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கட்டி வைத்து 2 நாட்கள் சித்திரவதை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு என்ற இடத்தில் காய்கறிகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அங்கு ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவர் தண்ணீர் தொட்டி கட்ட ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தம் முடிந்து அவர் ஊத்தங்கரை பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் நாராயணனின் அண்ணன் மகன் பிரபாகரன் ஏற்கனவே வேலை செய்த இடத்திற்கு நாராயணனை தேடி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரபாகரன் இரண்டு டன் இரும்பு கம்பிகளை திருடி விட்டதாக கூறி அங்கு வேலை செய்த வடமாநில தொழிலாளர்கள் கட்டி வைத்து சித்திரவதை செய்தனர்.
அதை வீடியோ எடுத்து தனக்கு அனுப்பி 1.5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாக நாரயணன் சூளகிரி போலீசாரிடம் புகார் அளித்தார். எம்.ஆர் & கோ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் மணி என்பவர் வட மாநில தொழிலாளர்களை வைத்து தனது அண்ணன் மகன் பிரபாகரனை கட்டி வைத்து சித்திரவதை செய்து வருவதாகவும், பணம் கொடுத்தால் விட்டுவிடுவதாக கூறுகின்றனர் என்று காவல்துறையிடம் புகார் அளித்தார்.
தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த பிரபாகரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரை இரண்டு நாட்களாக கயிற்றில் கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்த 6 வடமாநில இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in