
திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். சமீபகாலமாக தனது உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது திரையுலகை சார்ந்த நண்பர்கள் அவரை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி 31ம் தேதியான இன்று விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியரின் 33வது திருமண நாள். இன்றைய தினம் அவர்களை நேரில் சந்தித்து திருமண வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர். இவரது இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, வெற்றி , செந்தூரப்பாண்டி உட்பட பல படங்களில் விஜயகாந்த் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.