புதுடில்லி,திருமணம் செய்வதற்கான வயது வரம்பை ஆண், பெண்ணுக்கு சீராக நிர்ணயிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, புதுடில்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுஉள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
‘தற்போது ஆண்களுக்கான திருமண வயது, ௨௧ என்றும், பெண்களுக்கான திருமண வயது, ௧௮ என்றும் உள்ளது. இது பாலின சமத்துவத்துக்கு எதிராக உள்ளது. அதனால் இரு பாலினத்தவருக்கும் ஒரே சீரான வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும்’ என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
‘இந்த விவகாரம் தொடர்பாக பல நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதால், அனைத்தையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும்’ என, அஸ்வினி உபாத்யாய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை தங்களுக்கு மாற்றும்படி, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றும்படி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement