திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தில் பணியைத் தொடங்காமல் உள்ள நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து வணிகர்கள், பொதுமக்கள் இன்று (31-ம் தேதி) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலை துறை சார்பில் திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை பேருந்து நிறுத்ததில் இருந்து ரயில்வே கேட் (விழுப்புரம் – திருவண்ணாமலை சாலை) வரை, சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 4 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதையொட்டி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தாக கூறி 40-க்கும் மேற்பட்ட வீடுகள், சுற்று சுவர்கள் இடித்து தள்ளப்பட்டது.
ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்களின் கட்டிடங்கள் இடிக்காமல், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளை இடித்துள்ளனர் என குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக 4 அடி அகலம், 5 அடி ஆழத்துக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டாமல் உள்ள நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வேட்டவலம் சாலை பேருந்து நிறுத்தம் அருகே இன்று (31-ம் தேதி) சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், சாலையின் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை நிறுத்தினர். இதனால், விழுப்புரம் – திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள், கடலூர் – சித்தூர் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கூறும்போது, “சாலை விரிவாக்கம் மற்றும் ராட்சத கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை கடந்த 4 மாதத்துக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையினர் தொடங்கினர். இதற்காக பலரது வீடுகள் இடிக்கப்பட்டது. மேலும், கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக 4 அடி அகலம் மற்றும் 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினர். ஆனால், கழிவுநீர் கால்வாய் கட்டவில்லை. இதனால், கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்வதில் சிரமமாக உள்ளன. கழிகளை கட்டி, வழித்தடம் அமைத்து பயன்படுத்தி வருகிறோம். கழிகளின் மீது குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்லும்போது ஆபத்தாக உள்ளன.
முடங்கிய வியாபாரம்: தோண்டிய பள்ளத்தில் கழிவு நீர் கால்வாய் கட்டாததால், வியாபாரமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம், கடை வாடகை செலுத்த முடியாமல் அவதிப்படுகிறோம். கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. அலட்சியமாக உள்ளனர். மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றி அகற்றப்படாததால் கழிவுநீர் கால்வாயை அமைக்க முடியவில்லை என கூறுகின்றனர். மின்சாரத் துறையிடம் கேட்கும்போது, மின் கம்பங்களை அகற்றுவதற்கான நிதியை வழங்கினால், உடனடியாக அகற்றப்படும் என்கின்றனர். கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க ஆட்சியர் பா.முருகேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மீண்டும் கெடு விதிப்பு: இதுப்பற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர், சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். மேலும் அவர்கள், வாகனங்களின் பதிவு எண்களை செல்போன் மூலம் படம் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலரிடம் ஆலோசித்த பிறகு, வரும் 3-ம் தேதிக்குள், கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து 30 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் போரட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது வணிகர்கள் கூறும்போது, காவல்துறை தெரிவித்துள்ள தேதிக்குள் கழிவுநீர் கால்வாய் அமைக்கவில்லை என்றால், வரும் 6-ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.