ஸ்ரீநகர்: தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஹுரியத் மாநாடு அமைப்பின் ஸ்ரீநகர் அலுவலகத்தை தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) முடக்கியுள்ளது.
23 பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பான ‘அனைத்து கட்சி ஹுரியத் மாநாடு’ கடந்த 1993-ல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு திரட்டும் நிதியை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்ஐஏ தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் மாநிலம், நகரின் ராஜ்பாக் பகுதியில் உள்ள ஹுரியத் மாநாடு அலுவலகத்தை முடக்க சிறப்பு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதன்பேரில்என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்த அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
அலுவலக வாயிலில் என்ஐஏ ஒட்டியுள்ள நோட்டீஸில், “தற்போது வழக்கை எதிர்கொண்டு வரும் நயீம் அகமது கான் என்பவருக்கு கூட்டாக சொந்தமான இந்தக் கட்டிடம் நீதிமன்ற உத்தரவின் பேரில்முடக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. பிரிவினைவாத அமைப்பு களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 2019 ஆகஸ்ட் முதல் மூடப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஹுரியத் மாநாடு தலைவர் மிர்வைஸ் உமர் பரூக் கூறும்போது, “காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை இந்த அலுவலக முடக்கம் பாதிக்காது” என்று கூறியுள்ளார்.