“மழைக் காலங்களில் தூய்மைப் பணியாளர்களின் பணி அளப்பரியது,” என, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள தடுப்புப் பணிகளிலும், மாண்டஸ் புயலின் போது சிறப்பாகப் பணிபுரிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பருவமழையில் சிறப்பாக பணியாற்றிய ஆணையர் , தூய்மைப் பணியாளர், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பருவமழையை கையாண்டது குறித்த ஆவணப்படத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மழை, வெள்ள காலங்களில் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழாவில் பங்கேற்பதில் பெருமை மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அதையெல்லாம் விட இந்த விழாவை தான் பெருமையாக கருதுகிறேன்.
அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிறது. இதில் கொரானாவை வென்றோம், மழை – வெள்ளத்தில் மக்களை காத்தோம் என்ற இரண்டு சாதனைகளை படைத்து உள்ளோம். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் இருந்து விட்ட காரணத்தினால் மழையை கட்டுப்படுத்துவதில் நெருக்கடிகள் ஏற்ப்பட்டன. அதனை பாடமாக எடுத்துக் கொண்டு அடுத்த மழை வருவதற்கு முன்பாக என்ன மழை பெய்தாலும், மழை நீர் தேங்காத வகையில் உறுதி எடுத்து நிறைவேற்றியும் காட்டினோம்.
மக்களின் பாராட்டுக்களை அரசு பெறுவதற்கு முக்கிய காரணம் மாநகராட்சி ஊழியர்கள் தான். அதனால் தான் நாங்கள் உங்களை பாராட்ட வந்துள்ளோம். நேருவுக்கு நிகர் நேரு தான் என்று அடிக்கடி சொல்வேன். அவர் நான்கு கால் பாய்ச்சலில் தான் செயல்படுவார். அன்பும், கோபம் என இரண்டுமே கொண்டவர். மா.சுவும், சேகர்பாபும் இரவு பகல் பாராமல் பணியாற்றினார்கள். சென்னை மேயர் பிரியாவும், துணை மேயர் மகேசும் 24 மணி நேரமும் சுற்றி சுழன்று பணிகளை முடக்கி விட்டனர்.
மக்களுடைய மகிழ்ச்சியே நம் இலக்கு, அதை நோக்கியே நாம் பணியாற்றி வருகிறோம். அறுசுவை உணவு எப்போதும் நேரு நிகழ்ச்சியில் இருக்கும். அனைவரும் உணவருந்தி செல்லுங்கள். உங்களுடன் நானும் உணவருந்த உள்ளேன். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சென்னை மேயராக இருந்தவன் நான் ஒவ்வொரு வார்டும், ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும். இனி வரக்கூடிய காலங்களில் சென்னை மாநகராட்சிக்கு நிரந்தர தீர்வு உருவாக்க முடிவு செய்து ஓய்வுபெற்ற அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்துள்ளோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.