புதுச்சேரி: தெலங்கானா அரசுக்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையிலான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாக ஆளுநர் மாளிகையின் சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது என்று புதுச்சேரி ராஜ்நிவாஸ் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டை ஒட்டி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாநாட்டிற்கு வந்துள்ள பிரதிநிதிகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்திப்பதாக இருந்தது. ஆனால் துணைநிலை ஆளுநர் அவசரமாக தெலங்கானா புறப்பட்டு சென்றதால் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை. தெலங்கானா மாநில அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் 30ம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சர் பிரசாந்த் ரெட்டி ஆளுநர் தமிழிசையை தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சந்தித்து பட்ஜெட்டிற்கு அனுமதி வழங்குமாறும் தெலங்கானா சட்டப்பேரவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறும் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, வரும் பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனுமதி கேட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த முறையைப் பேலவே ஆளுநரின் உரை இல்லாமலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முயற்சி நடப்பதாக அறிந்த நிலையில், தற்போது வந்துள்ள கடிதத்தில் சட்டப்பேரவையில் ஆளுநரின் உரை இடம் பெறுமா பெறாதா என்பது பற்றிய தெளிவான குறிப்பு இல்லை என்பதை சுட்டிக்காட்டி அது பற்றி விளக்கம் கேட்டு ஆளுநர் கடிதம் அனுப்பி இருந்தார். அதற்கு பதில் வராத நிலையில் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், தெலங்கானா அரசு அவசர மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அரசு சார்பில் வாதாடிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஷ்யநத் தாவே அளித்த மனுவில் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு ஆளுநருக்கு ஆணையிட கோரியிருந்தார். அதனைக் கேட்ட உயர்நீதிமன்றம், ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தலைமை அரசியல் சாசன பதவியை வகிப்பவர். அவருக்கு ஆணையிட முடியாது. நீதித்துறை அரசியலமைப்பு நடைமுறைகளில் தலையிட முடியாது. இதனை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது.
நீதிமன்ற தீர்ப்பு 30ம் தேதி பகலில் வெளியானதை அடுத்து ஆளுநருக்கு எதிராக போடப்பட்ட வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்குமாறும் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன் பின்னணியிலேயே சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சர் ஆளுநரை அவரது மாளிகையில் சந்தித்தார். ஏற்கனவே, குடியரசு தின விழாவை நடத்தாமல் இருப்பதை எதிர்த்து அரசுக்கு எதிராக போடப்பட்ட பொது நல வழக்கிலும் உயர்நீதி மன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி குடியரசு தின விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகளின் மூலமாக ஆளுநர் மாளிகையின் சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.