தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப் பள்ளிஅமைந்திருக்கிறது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்தையும், கழிவறையையும் சுத்தம் செய்வது போன்றவீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மாணவர் ஒருவர் கையில் பக்கெட்டுடன் கழிப்பறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதும், சில மாணவர்கள் பள்ளி வளாகத்திலுள்ள குப்பைகளை சுத்தம் செய்வதும், சுவர்களில் ஒட்டடை அடிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனகராஜிடம் பேசினோம். “இதுபோன்ற தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதில்லை. பள்ளியில் தூய்மைப் பணியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதனால், ஆசிரியர்கள் பங்களிப்புடன் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து வருகிறோம். அவர்களும் இல்லாத நேரத்தில், பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியின் பொறுப்பு உடற்கல்வி ஆசிரியரிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
அவர் கழிவறையில் துர்நாற்றம் வரும் என்பதற்காக கடைசியில் வரும் மாணவர்கள் தண்ணீர் ஊற்றிவிட்டு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். அதனடிப்படையில் மாணவர் ஒருவர் கழிவறையில் தண்ணீர் ஊற்றும்போது, அதை மாணவர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறார். இருப்பினும் இதில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.