புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரை, தேர்தல் பிரச்சார உரையைப் போன்று இருந்தது என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆற்றிய உரை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ”குடியரசுத் தலைவர் என்பவர் (நாடாளுமன்ற) தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால், குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை, பாஜக தனது அடுத்த தேர்தல் பிரச்சாரத்தை அவரைக் கொண்டு தொடங்கி இருப்பதுபோல் இருக்கிறது. தி
ரவுபதி முர்முவின் மொத்த உரையுமே தேர்தல் பிரச்சார உரையாகத்தான் இருந்தது. அரசு செய்த அனைத்தையும் குறிப்பிட்டு அவர் புகழ்ந்து பேசி உள்ளார். அரசு எதை செய்யத் தவறியதோ அவை குறித்து குடியரசுத் தலைவர் எதையும் குறிப்பிடவில்லை” என தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ”குடியரசுத் தலைவரின் உரை, அரசின் உரையாக இருப்பதுதான் வழக்கம். அப்படித்தான் இதுவும் இருந்தது. அரசு என்ன விரும்புகிறது என்பதை அவரின் உரை வலியுறுத்தி இருக்கிறது. நாங்கள்(காங்கிரஸ்) குடியரசுத் தலைவரின் உரைக்கு மதிப்பளிக்கிறோம். குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தின் போது நாங்கள்(காங்கிரஸ்) எங்கள் கருத்தை தெரிவிப்போம்.
அரசுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். வேலைவாய்ப்பு தொடர்பாக குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நாங்களும் பொதுமக்களும் தோல்வி அடைந்த அரசாகத்தான் இந்த அரசை பார்க்கிறோம். இவர்கள் பேசுகிறார்களே தவிர, செயலில் ஏதும் இல்லை. பட்ஜெட் கூட்டத்தொடரில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சீன எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்புவோம்” என தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரின் உரை குறித்து கருத்து தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, “உரை நன்றாக இருந்தது; நல்ல உரை” என குறிப்பிட்டார்.