நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான்! இதுவரை எத்தனை பேர்?

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5ஆவது முறையாக தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. சண்முகம் செட்டியார்: நாட்டின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவரே ஒரு தமிழர்தான். கடந்த 1947-ல் சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் முதல் பட்ஜெட்டை தமிழரான சண்முகம் செட்டியார் சமர்ப்பித்தார்.
2. கிருஷ்ணமாச்சாரி: இதன்பின் 1957, 1958, 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழரான கிருஷ்ணமாச்சாரி பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது முதல் பட்ஜெட்டில்தான் வரி தொடர்பான முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.
3. சுப்பிரமணியம்: தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த சுப்பிரமணியம் 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் இடம் பெற்று அந்தாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
image
4. வெங்கட்ராமன்: கடந்த 1980-ம் ஆண்டு பொது தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆன நிலையில் வெங்கட்ராமனை நிதியமைச்சராக நியமித்தார். தஞ்சாவூரை சேர்ந்தவரான வெங்கட்ராமன் 1980 மற்றும் 1981-ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 
5. சிதம்பரம்: தமிழகத்தின் சிவகங்கையை சேர்ந்த சிதம்பரம் 1997ம் ஆண்டு முதன்முறையாக மத்திய நிதியமைச்சர் ஆனார். அந்த ஆண்டு அவர் தாக்கல் செய்த பட்ஜெட் கனவு பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் முடுக்கிவிடப்பட்டதுடன் வருமான வரி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான வரி விகிதங்கள் இந்த பட்ஜெட்டில் கணிசமாக குறைக்கப்பட்டன. இதன்பின் அவர் 8 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பட்ஜெட்டுகள் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மொரார்ஜி தேசாய்க்கு அடுத்த இடத்தை சிதம்பரம் பெற்றுள்ளார். இவர் 9 பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
6. நிர்மலா சீதாராமன்: தற்போது பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் 5ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மதுரையில் பிறந்தவரானநிர்மலா சீதாராமனுக்கு இந்தியாவின் முழு முதல் நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையும் உண்டு.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.