சென்னை மெரினாவில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி செலவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே
நாம் தமிழர்
கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மேலும் இதனால், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும், மக்கள் வரிப்பணத்தில் ஏற்கனவே மெரினாவை சுடுகாடாக்கி நினைவிடங்களை கட்டிவிட்டீர்கள், மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விஷயங்களை முன்வைத்து சீமான் எதிர்ப்பை காட்டி வருகிறார்.
இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதை குறித்து மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், நினைவு சின்னம் கட்டமைப்புக்கான மாநில அரசு வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் கூடிய இடர் மதிப்பீட்டு அறிக்கை உட்பட பிற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
மேலும், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, இன்று திருவல்லிக்கேணியில் அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சிக்காரர்கள், அதிமுக, நாம் தமிழர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பேனா நினைவு சின்னம் வேண்டும் என்பவர்களும், வேண்டாம் என்பவர்களும் அதற்கான காரணங்களை கூறி மேடையில் நின்று பேசினர்.
நினைவு சின்னம் வேண்டாம் என்று பேசியவர்களை பேச விடாமல் கீழே இருந்த திமுகவினர் மிரட்டும் தொனியில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் கற்களை கொட்ட வேண்டும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் இல்லை பேனா சின்னத்துக்கு எங்க இருந்து காசு வருது. பேனா சின்னம் வைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கடலில் வைப்பதை அனுமதிக்க முடியாது என்றார். அப்போது திமுகவினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அதற்கு பதிலடி கொடுத்த சீமான், ”உங்களுக்கு எதை பத்தியும் கவலை இல்லை. உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு; நீ பேனாவை வை, ஒருநாள் நான் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ட்விட்டரில் ” #கடலில்பேனா_வேண்டாம் ” என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
மெரினாவில் 81 கோடியில் கட்டப்படவுள்ள இந்த பேனா நினைவுச்சின்னம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இதனை அருகில் சென்று பார்க்க நினைவிடத்தில் இருந்து 290 மீட்டருக்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டருக்கும் பாலம் கட்டப்படவுள்ளது.