காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அருகே ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன். பிளம்பர் மற்றும் எலக்ட்ரிசீயன் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், சரவணன் நேற்று முன்தினம் இரவு ஆரம்பாக்கம் மதுபானக் கடை பகுதி அருகே மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, போலீசார், சம்பவ இடத்த்திற்குச் சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து டாஸ்மாக் கடைகளுக்கு வந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சரவணனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.