புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையில் பல முக்கிய விஷயங்களை குறித்து பேசியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவை நோக்கிய உலகத்தின் பார்வை மாறிவிட்டது என்றார். குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திய போது, அவை முழுவதும் ஆளும் கட்சியினரின் கைதட்டல்கள் எதிரொலித்தது. பிரதமர் நரேந்திர மோடியும் பலமுறை மேசையைத் தட்டுவதைக் காண முடிந்தது. அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பி.க்களை காண முடிந்தது. ஆனால் தற்போது நாடே ஒரு தலைவரை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறது. அவரை இன்றைய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு உரையாற்றும் போது காணமுடியவில்லை. ஆம், கடந்த ஐந்து மாதங்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் இருத்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் முன் வரிசையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் அமர்ந்திருந்தார். அவரின் பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. ராகுல் காந்தி மேற்கொண்ட “இந்தியா ஒற்றுமை யாத்திரை” நிறைவடைந்துள்ள நிலையில், இன்று ஏன் ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்பதுதான் மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி.
ராகுல் காந்தி இன்னும் காஷ்மீரில் இருப்பதே இதற்குக் காரணம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கீர் பவானி கோவிலுக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று சென்றனர்.
आज @RahulGandhi जी और @priyankagandhi जी ने खीर भवानी मंदिर में माथा टेककर देश की एकता, समृद्धि की मंगलकामना की और माँ का आशीर्वाद लिया। pic.twitter.com/NC8SII9Hzu
— Indian Youth Congress (@IYC) January 31, 2023
செவ்வாய்கிழமை காலை ராகுலும் பிரியங்காவும் ஸ்ரீநகரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள மத்திய காஷ்மீரில் உள்ள துலாமுலாவை அடைந்தனர். இங்குதான் கீர் பவானி கோவில் உள்ளது. ராகுலின் வாகனம் கோவில் வாசலை அடைந்தவுடன், கமாண்டோக்கள் காங்கிரஸ் தலைவரை சூழ்ந்து கொண்டனர். மாதா கீர் பவானி என்று அழைக்கப்படும் ராக்யா தேவியின் கோவிலுக்கு சகோதரனும் சகோதரியும் சென்றுள்ளனர். இதன் காரணமாக பங்கேற்க முடியவில்லை எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் சென்ட்ரல் ஹாலில் முன் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா காந்தி, ஜனாதிபதியின் உரையை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மேசை மீது தட்டிக்கொண்டு இருந்தாலும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமைதியாக இருந்தனர். இருப்பினும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசாங்கத்தை சுற்றி வளைப்பதற்கான வியூகத்தை தெளிவுபடுத்தி உள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனா, எல்ஐசி உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை எழுப்பி அரசிடம் பதில் பெறுவோம் எனக் கூறியுள்ளார்.