பட்ஜெட் 2023 கூட்டத் தொடர் தொடக்கம்: ஒன்றிய அரசை புகழ்ந்து தள்ளிய குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து குதிரைப் படை சூழ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அவரை துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கார், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா

உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன் பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் மைய மண்டபத்துக்கு வந்தார் திரௌபதி முர்மு.

அப்போது உரையாற்றிய அவர் ஒன்றிய அரசின் திட்டங்களை பாராட்டியதோடு, அரசின் கனவுகளையும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

“இந்தியா தன்னம்பிக்கையில் உச்சத்தில் இருக்கிறது. உலகம் இந்தியாவை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறது. உலக நாடுகளின் பிரச்சினைகளுக்கு இந்தியா தீர்வை வழங்கி வருகிறது. தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உள்நாட்டிலேயே போர் விமானங்களை உருவாக்கும் அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஏழை மக்களுக்காக ஒன்றிய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. பெண்களின் வளர்ச்சிக்காக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவின் பெரிய வளர்ச்சிக்கான கனவுகளை ஒன்றிய அரசு கொண்டிருக்கிறது. 2047ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை, பொற்கால இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் பெண்கள், இளைஞர்கள் பங்கு இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அவர், “காஷ்மீருக்கான சிறப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் முத்தலாக் தடைச் சட்டம் வரை பல்வேறு விவகாரங்களில் அரசு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கராவதம் ஒழிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொலைதூரத்திலுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகியவை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேயை நவீனமயமாக்க ஒன்றிய அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊழல் என்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். அதனை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை

எடுத்துள்ளது.

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் அவர்களை நோக்கிச் செல்கின்றன. இதனால் அவர்களால் புதிய கனவு பாதையில் பயணிக்க முடிகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் பசியாறப் பிரதமரின் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க இந்தியா கையாண்ட விதத்தைப் பார்த்து உலகமே பாராட்டியது” என்று

கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.