பழனி கோவில் கருவறைக்குள் முக்கிய நபர்கள் முதல் பலரும் நுழைந்து ஆகமவிதி மீறியது உண்மை என்றும், பழனி கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும் பழனி கோவில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தின் தலைவரும் பழனி கோவிலை சேர்ந்தவருமான கும்பேஷ்வரர் குருக்கள் என்பவர் வெளியிட்டுள்ள ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முதல்நாளான ஜனவரி 26ம் தேதி ஆகம விதிகளை மீறி சிலர் கோவில் கருவறைக்குள் உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. ஆகம விதிமீறல் நடந்தபோது அங்கு இருந்த அர்ச்சகர்களில் ஒருவரான, பழனி கோவில் முக்கிய அர்ச்சகர்களில் ஒருவரும், பழனி அர்ச்சக ஸ்தானிக சங்கத்தின் தலைவருமான கும்பேஷ்வரர் குருக்கள் தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் அவர், “ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் அவர்கள் நுழைந்தது மாபெரும் குற்றம். அதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த அர்ச்சகர்களின் செயல் தவறானது. அர்ச்சகர்களில் ஒரு சிலர் பணம் என்கிற நோக்கத்தில் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கேவலமானது. வருகிற ஆனி மாதம் பழனி கோவில் மூலவர் சிலைக்கு மீண்டும் மருந்து சாத்தப்பட்டு, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதுகுறித்து அர்ச்சகர் சங்கம் சார்பில் கூட்டம் போட்டு கலந்து பேசி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து செயல்படுவோம்.
இதற்கு சம்மதித்து அர்ச்சகர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். இல்லையென்றால் கருவறையில் நடந்த உண்மைகளை பொதுவெளியில் கொண்டுவருவேன். நேர்மையாக செயல்படாமல், துர்சக்திகளை வைத்து செயல்படுவது நமக்கும், நமது சமூகத்திற்கும், உலகத்திற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமைச்சர்கள் கருவறைக்குள் நுழையும்போது கையை பிடித்து இழுத்து தடுத்து பிரச்னை ஏற்பட்டது ஊரே தெரிந்து விட்டது. ஆனாலும் நம்மில் உள்ள ஒரு சிலரால் அவர்கள் கருவறைக்குள் நுழைந்து விட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் நல்லது நடக்க செயல்படலாம்” என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM