பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான்

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாரூக்கான். நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த 'பதான்' படம் கடந்த வாரம் வெளிவந்து வசூல் மழையைப் பொழிந்து கொண்டிருக்கிறது. நேற்று வரை இப்படத்தின் வசூல் உலக அளவில் 500 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமே இப்படம் நிகர வசூலாக 300 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. ஷாரூக்கான் நடித்த படம் ஒன்று நிகர வசூலாக 300 கோடி ரூபாயைக் கடப்பது இதுவே முதல் முறை. அதிலும் ஆறே நாட்களில் இந்த வசூல் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு அவர் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் 225 கோடி வசூலைப் பெற்றதே சாதனையாக இருந்தது.

'பதான்' படத்தின் வெற்றி விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஷாரூக்கான், “நாங்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை. படத்தில் நாங்கள் சொல்லும் சில விஷயங்கள் யாரையும் புண்படுத்துவதற்கோ, எந்த சென்டிமென்டையும் அவமதிப்பதற்கோ செய்வதில்லை. அவையெல்லாம் ஒரு என்டர்டெயின்மென்ட் மட்டுமே. சினிமாவில் ஒவ்வொருவரும் மற்றவரை நேசிக்கிறோம். அன்பை மட்டுமே பரப்ப முயற்சிக்கிறோம். இவர் தீபிகா, அவர் அமர், நான் ஷாரூக்கான், இது ஜான், இது ஆண்டனி, இதெல்லாம்தான் சினிமா,” என்று பட வெளியீட்டிற்கு முன்பு எழுந்த சர்ச்சை குறித்து மறைமுகமாகப் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.