புதுச்சேரி: வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியில் கடலில் இருந்து வீசும் தரை காற்றினால் மணல் அலை அலையாக சாலைகளில் பரவி வருகிறது. இலங்கை அருகே தென்மேற்கு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 3-ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் அலைகள் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் கடலில் இருந்து தரை கற்று வீசுவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோரம் உள்ள மணல் தரை காற்றினால் தள்ளப்பட்டு சாலையில் கடல் அலை போல் பரவி செல்லும் நிலை புதுச்சேரியில் தற்போது நிலவி வருகிறது.