புதுடெல்லி: சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு நடுவிலும், பொதுமக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக மத்திய பட்ஜெட் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலையில் நாடாளுமன்றம் வந்தபிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டு நலனும், குடிமக்களின் நலனும்தான் முதல் என்ற குறிக்கோளுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. இதே தத்துவத்தை மையமாகக் கொண்டதாகவே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (இன்று) தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டும் இருக்கும்.
புதிய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற திரவுபதி முர்முநாடாளுமன்றத்தில் முதல்முறை யாக உரையாற்றுகிறார். எனவே, இன்று (நேற்று) வரலாற்று சிறப்புமிக்க தினம். மேலும் அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பெருமை சேர்ப்பதாக அமையும்.
நமது நிதியமைச்சரும் ஒரு பெண்தான். அவர் வரும் 2023-24-ம்நிதியாண்டுக்கான பட்ஜெட்டை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்ய உள்ளார். சர்வதேச அளவில் நிலையற்ற பொருளாதார சூழல் நிலவும் நிலையில் இந்தபட்ஜெட்டை நம் நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
மந்தமான சர்வதேச பொருளாதார சூழலுக்கு நடுவே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். குறிப்பாக பொதுமக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக பட்ஜெட் அமையும்.
நாட்டுக்குத்தான் முதலிடம் என்ற ஒரே எண்ணம்தான் நமக்கு உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரில் எல்லா விவகாரங்கள் குறித்தும் நாங்கள் விரிவாக விவாதம் நடத்த தயாராக உள்ளோம். அனைத்து உறுப்பினர்களும் இந்தத் தொடரில் பங்கேற்பார்கள். இந்தத் தொடர் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.