மன்னார்குடி: மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையத்தில் குவிந்து கிடைக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரி டெல்டா மாவட்டங்களில் கடை மடை பாசன மாவட்டமான திருவாரூரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடை பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் 450 கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்காக நெல்மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவந்து குவித்துவருகின்றனர்.
குறிப்பாக மன்னார்குடி, நீடாமங்களம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 முட்டைகள் வரை மட்டுமே விவசாயம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1000 தில் இருந்து 5000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படாமல் மலைபோல தேங்கிக்கிடக்கின்றன. இந்த நெல் மூட்டைகள் பனிப்பொழிவு காரணமாக ஈரப்பதம் அதிகமாகும் நிலையில் அதனை காரணம் காட்டி அதிகாரிகள் கொள்முதல் செய்வதில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றிற்கு 1000 மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.