சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணைஇணைப்பதற்கான அவகாசம் வரும்15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவகாசம் வழங்கப்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்த அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மின்நுகர்வோர் மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி தொடங்கியது. மொத்தம் உள்ள 2.67 கோடி மின்நுகர்வோரில் இன்று (நேற்று) வரை 2.42 கோடி மின்நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது, 90.69 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். 9.31 சதவீதம் பேர் இணைக்க வேண்டியுள்ளது. வீடுகளுக்கான 2.38 கோடி மின்இணைப்புகளில் 15 லட்சம் பேர் இன்னும் இணைக்காமல் உள்ளனர்.
எஞ்சியுள்ள 9 சதவீத மின் நுகர்வோரும் பிப்.15-ம் தேதிக்குள் தங்களதுமின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பதற்காக, 15 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் வாரியம் மூலம் இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது. இதுவே இறுதி கெடு ஆகும்.
வீடுகள், விவசாய நிலங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது அவர்கள் ஆதார் எண் இணைக்க சில சவால்களை சந்திப்பதாக தெரியவந்துள்ளது. இதை சரிசெய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசு துறைகள் பாக்கி வைத்துள்ள ரூ.4,500 கோடி மின்கட்டண நிலுவைத் தொகையை வசூலிப்பது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் நிதித் துறையுடன் பேசி அத்தொகையை படிப்படியாக பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மின்பகிர்மான கழக இயக்குநர் சிவலிங்க ராஜன், நிதிப் பிரிவு இயக்குநர் சுந்தரவதனம், மின்தொடரமைப்புக் கழக இயக்குநர் மணிவண்ணன் உடன் இருந்தனர்.