எந்த அரசியல் பின்புலமும் செல்வாக்கும் இல்லாத எளிய பின்னணியிலிருந்து வந்த என் கலை வெளிப்பாட்டுச் சுதந்தரத்தையும் வழிபாட்டுணர்வு சுதந்திரத்தையும் இந்திய அரசியலமைப்பு காப்பாற்றியுள்ளது.
அதனால், இந்த இடைக்காலத் தடையை இந்துத்துவ பாசிச ஆட்சியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் விடுத்திருக்கும் எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். ‘காளி’ என்ற ஆதிப்பெண் வடிவம் எல்லோருக்குமானது. இந்துத்துவவாதிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்ற செய்தியையும்தான், இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – உறுதியுடனும் உற்சாகத்துடனும் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை.
‘காளி’ ஆவணப்பட போஸ்டர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து லீனா மணிமேகலையை கைதுசெய்ய இடைக்கால தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தற்போது, கனடாவில் கலை சார்ந்த படிப்பை படித்துக்கொண்டிருந்தாலும் தன்மீதான வழக்குகளை எதிர்கொள்வதோடு, தனது ஆறு கவிதை தொகுப்புகளை உள்ளடக்கிய ‘எட்டாம் கன்னிமார் திரட்டு’ நூலையும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு கொண்டுவந்திருக்கிறார் லீனா மணிமேகலை. பல்வேறு கேள்விகளுடன் அவரை தொடர்புகொண்டு பேசினோம்,
“உங்களைக் கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைதான் விதித்திருக்கிறது. ஒருவேளை, மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் சிறை என்று உத்தரவிட்டால் என்ன முடிவு எடுப்பீர்கள்?”
“காளியைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு என்னைக் கூட்டு வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து ஒளிபரப்புவோம். உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டிச் சாய்ப்போம். குடும்பத்தை அழித்தொழிப்போம், தலைக்கு இரண்டு மில்லியன், உடல் துண்டுகளுக்கு லட்சங்கள் என வன்முறையை அவிழ்த்துவிட்ட பாசிச இந்துத்துவவாதிகளையும் மடாதிபதிகளையும் தான் சிறையில் தள்ளவேண்டும். கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், ரேபிஸ்ட்டுகளையெல்லாம் விட்டுவிட்டு என்மீது வழக்குகள் பதிவுசெய்து டார்ச்சர் செய்த அரசாங்கங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும். வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண வீக்கம் என நாட்டு மக்களை வாட்டிக்கொண்டிருக்கும் பிரச்னைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு காளி சிகரெட் பிடிக்கக்கூடாது, குயர் கொடி பிடிக்கக்கூடாது என்று ஒரு திரைப்பட போஸ்டரை வைத்து மதப்பிரிவினைவாத அரசியல் செய்யும் கீழ்த்தரமான மோடி அரசுதான் கண்டிக்கப்பட வேண்டும்”.
“தமிழ்நாட்டில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள்?”
“என்னைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தை சேர்ந்த சரஸ்வதியைக் கைது செய்ததன் மூலம் தமிழக அரசிற்கு, என் பாதுகாப்பின் மீதும் கலை வெளிப்பாட்டு சுதந்திரத்தின் மீதும் அக்கறை உள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறேன். என் அம்மா வாழும் ஊரில் கலவரம் செய்ய முயற்சித்த பாஜகவினரை கண்டுப்பிடித்ததோடு, அம்மாவின் பாதுகாப்பிற்காக காவலர்களை வீட்டிற்கே அனுப்பிவைத்த தமிழக அரசிற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
“காளி ஆவணப்படம் எதைப் பற்றியது?”
“ஜூன் 26-ஆம் தேதி குயர் சமூகத்தினருக்கான சர்வதேச சுயமரியாதை தினம். அன்று, டொரான்டோவில் நகர் உலா போகும் காளியை பல்வேறு இன-தேசிய-பண்பாடுகளைச் சேர்ந்த மக்கள் தரிசிக்கும்போது நடக்கும் காட்சிகள்தான் ‘காளி’. அதில், காளியாக வலம் வருவது நான்தான். இந்த பாணி படங்களை நிகழ்த்துக்கலை, ஆவணப்படம் என்று வகைப்படுத்தலாம். Loitering என்று குயர் அரசியல் பதம் ஒன்று உண்டு. ‘What if a goddess decides to loiter?’ என்ற என் கேள்விக்கான பதில்தான் ‘காளி’. இப்படத்திற்காக, பல்வேறு நாடுகளிலுள்ள குயர் தோழமைகளின் அரவணைப்பு எனக்கு கிடைத்திருக்கிறது”.
“குயர் சமூகம் குறித்து சமீபத்தில் வெளியான பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தைப் பார்த்தீர்களா?”
” `நட்சத்திரம் நகர்கிறது’ பாசாங்குகள் நிறைந்த, பெண்ணியம், சுதந்திரக் காதல் குறித்த தட்டையானப் புரிதல் கொண்ட, குயர் மக்களை செட் ப்ராபர்டியாக பயன்படுத்திய ஒரு அரைவேக்காட்டுப் படம். ‘மெட்ராஸ்’ படம் தமிழ் சினிமாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று பாராட்டியதும் தலித் போராளியாக ஒருவர் ஆகிவிட முடியும் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை உள்ளவாறு விமர்சித்தால் தலித் விரோதி என்று தாக்குவது. நல்ல கலை – சுதந்திரமான சிந்தனையாளர்களை உருவாக்கும். ரசிகர்களையும் ட்ரோல்களையும் அல்ல”.
“‘மாடத்தி’, ‘செங்கடல்’ போன்ற உங்களுடைய படங்கள் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் முழுமையாக போய் சேரவில்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?”
“தமிழ்ச் சமூகம் சுயாதீனத் திரைப்படங்களையோ கலைஞர்களையோ என்றும் மதிப்பதில்லை, பொருட்படுத்துவதுமில்லை. அதனால் இழப்பு எனக்கு மட்டுமில்லை. ஆனால் சினிமா ஒரு பிரபஞ்சக்கலை. நான் என்னை அதன் கண்ணியாகத்தான் கருதுகிறேன்”.
“லீனா மணிமேகலை என்றாலே சர்ச்சைக்குரியவர் என்ற தோற்றம் உருவாகியுள்ளதே?”
“ஆணாதிக்க, சாதிய பின்புலத்தில் இன்னும் உழன்றுக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகம், என்னை மாதிரியான சுயமரியாதை மிக்க, தனித்துவமானப் பெண்ணின் இருப்பை கொஞ்சிக் குலாவுமா என்ன? என்னை வீழ்த்த நினைக்கிறது. ‘கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கும்வரை உன்னை யாராலும் அழிக்க முடியாது கண்ணம்மா’ என்று என் அப்பா, காலஞ்சென்ற தமிழ்ப்பேராசிரியர் இரகுபதி சொல்வார். நான் ஒருநாள் கூட, ஒரு மணிநேரம் கூட உழைக்காமல் இருந்ததில்லை. எனக்கு அரணாக இருப்பது, என் வேலை மட்டும் தான்”.
“தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?”
“தமிழ் சினிமா நேற்றும் இன்றும் நச்சு ஆண்மைய சினிமாதான். அரசியல் சினிமா என்று சொல்லி வெளிவருகின்ற சினிமாக்கள் கூட நாயக பிம்ப சினிமாவாகவே, உருவாக்கி பெண்ணின் இருப்பை இரண்டாம் பட்சமாகத் தள்ளிவிடுகின்றன. வெகுஜன சினிமாவிலிருக்கும் ஒருசில பெண் இயக்குநர்கள் கூட நாயக பிம்ப சினிமாவைத்தான் எடுக்கிறார்கள்”.
“இலக்கியத்திலிருந்து சினிமா எடுக்கும்போது, பெரும்பாலும் ஆண்கள் எழுதிய படைப்புகளைத்தான் இயக்குனர்கள் சினிமாவாக்குகிறார்கள். பெண்கள் எழுதும் படைப்புகளை திரைப்படங்களாக்குவதில்லையே?”
“அம்பை, தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி, சந்திரா என்று பெண் புனைவாளர்களின் எண்ணிக்கையும் தரமும் குறைந்ததல்ல. ஆனால் தமிழ் சினிமாவின் pro code தேடும் ‘சூப்பர் ஸ்டார்’, ‘சுப்ரீம் ஸ்டார்’ கதைகளை இவர்கள் எழுதுவதில்லையே?”.
உங்கள் ‘மாடத்தி’ மிகவும் ஒடுக்கப்பட்டவர்களான ‘புதிரை வண்ணார்கள்’ குறித்து பேசியது பாராட்டுக்குரியது. அதேநேரம், இப்படி திரைப்படங்கள். ஆவணப்படங்கள் எடுப்பவர்கள் சாதி இந்துக்களாக இருந்துகொண்டு சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கும் சாதி இந்துக்களை எதிர்க்காமல், சாதி இந்துக்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளைக் கேள்விகள் கேட்காமல், எஸ்.சி பிரிவினர் எஸ்டி. பிரிவினரை ஒடுக்கிறார்கள் என்று காட்டுவதிலேயே ஈடுபடுகிறார்கள் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?
“கடைக்கோடியில் யார் கண்ணிலும் பட முடியாமல் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு புதிரை வண்ணார் பெண்ணின் கால்களில் நின்று பார்க்க நினைத்து ‘மாடத்தி’ எடுத்தேன். புதிரை வண்ணார்கள் ஒடுக்கப்படுவதற்கு, அவர்களுக்கு மேலே சாதிப்படிநிலைகளில் இருக்கும் ஒவ்வொரு சாதியினரும் பொறுப்பேற்க வேண்டும். மற்றபடி, இந்த சாதி வெர்சஸ் அந்த சாதி என்று அந்தப்படத்தை பார்ப்பதில் உங்களிடம் தான் கோளாறு இருக்கிறது. சாதி என்பது தனுஷ், ரஜினி பாய்ந்து பல்டியடித்து அரிவாளால் வெட்டியோ, துப்பாக்கியால் சுட்டோ அழித்துவிட முடிகிற டார்கெட் அல்ல. சாதி என்பது தலைமுறை தலைமுறையாக நம் பின்னிலிருந்து நம்மை இயக்கும் சனாதனத்தின் தீய கண்கள். நாயக பிம்ப மாயைகளில் உங்களை அழுத்திவிடுகிற சினிமா, சாதி எதிர்ப்பில் இம்மியளவு முன்னேற்றத்தைக் கூட அசலாக ஏற்படுத்திவிடாது. நான் இந்த சாதியில், இப்படிப்பட்ட மொழி பேசும், இன்னார் குடும்பத்தில், இந்த பாலினத்தில் நாட்டில் பிறந்தது என் தேர்வல்ல. கலை வெளிப்பாடு மட்டுமே முழுக்க என் தேர்வு. அதிலும் வந்து நீ இதைத்தான் செய்யவேண்டும், இன்னாராகத் தான் இருக்க வேண்டும் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும் அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது?”
“கனடாவில் படிப்பு எப்படி போய்க்கொண்டிருக்கிறது? இனி கனடாவில்தானா?”
“கனடா நாளொரு பனிப்புயலுடன் சிறப்பாக இருக்கிறது. யோர்க் பல்கலைக்கழகம் வருடா வருடம், ஒரு சர்வதேச திரைப்பட இயக்குநரை தேர்ந்தெடுத்து முழு உதவித்தொகையும் கொடுத்து மாஸ்டர்ஸ் படிக்க அழைக்கிறது. அப்படித்தான், கடந்த 2020 ஆம் ஆண்டு அழைக்கப்பட்டேன். மீடூ இயக்கத்தின் போது என்னால் இனம் காட்டப்பட்ட இயக்குனர் பெட்டி கேஸைப் போட்டு சட்டத்திறகுப் புறம்பாக என் பாஸ்போர்ட்டை முடக்கி கல்வி வாய்ப்பையும் பறிக்க நினைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடித்தான் கனடா வந்தேன். இங்கு, சினிமாவில் மாஸ்டர்ஸ் டிகிரியை ஏ-ப்ளஸ் கிரேடில் படித்து முடித்திருக்கிறேன். செய்முறை டிகிரி என்பதால் ஐந்து செமஸ்டர்களில் சின்னது பெரியதென எட்டுப் படங்கள் தயாரித்து இயக்கியிருக்கிறேன். என்னுடைய தீசஸ் ‘காத்தாடி’ என்ற முழு நீளப்படத்தை கருத்தியல் ரீதியாக விளக்கப்படுத்தி நூறு பக்க ஆய்வு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். ‘காத்தாடி’ ஒரு தமிழ் குயர் பெண்ணின் காதல் வாழ்க்கையைப் பற்றியது. கனடிய பல்கலைகழகங்களிடையே மதிப்புமிக்க தீசஸ் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. திரைப்பட விழா பங்கேற்பு குறித்த அறிவிப்பு விரைவில் வரும். தற்போது அகில உலக அளவில் முதல் பத்து இடங்களில் இருக்கும் டொரோண்டா பல்கலைகழகத்தில் Artist in Residence ஆக நியமிக்கப்பட்டிருக்கிறேன். இந்தியா, கனடா என்றில்லை. எனக்கு எப்போதுமே, என் கால்களுக்கு கீழிருக்கும் மண் என் நிலம். என் தலைக்கு மேலிருக்கும் வானம் என் கூரை. என் இரு கைகளால் அணைக்க முடிந்தவர்கள் எல்லாம் என் மக்கள். இந்த மனநிலை நீடிக்கும் வரை மகிழ்ச்சியாக மிதந்துக் கொண்டிருப்பேன்”.