ஐதராபாத்: நானி நடிக்கும் தசரா பான் இந்தியா படத்தின் டீசரை ராஜமவுலி, தனுஷ் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து அதில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் நானி. தெலுங்கில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் தசரா. இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் திரையிட உள்ளனர். வரும் மார்ச் 30ல் படம் ரிலீசாகிறது. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்குகிறார். சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். இதில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமுத்திரக்கனி, சாய் குமார், ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் வாழ்க்கையை இந்த படம் சித்தரிக்கிறது. அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பற்றி படம் பேசுகிறது. சமூக நல்லிணக்கம் சிதறும்போது, அந்த கிராமத்தை சேர்ந்த நானி என்ன செய்கிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் படம் சொல்கிறது. இந்த படத்தின் தெலுங்கு டீசரை ராஜமவுலி, தமிழில் தனுஷ், இந்தியில் ஷாஹித் கபூர், மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.