ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜன.31) தொடங்கிய நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் வித்தியாசமான, ‘செய்கை’கள் மற்றும் பேட்டிகளால் மாநகராட்சி அலுவலகம் கலகலப்பாக காணப்பட்டது.
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமார் வேட்புமனுக்களை பெறும் பணியில் ஈடுபட்டார்.
சுயேட்சைகளால் கலகலத்த தேர்தல் அலுவலகம்: முதல்நாளான இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், சுயேட்சைகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. வாக்காளர்களை மட்டுமல்லாலாமல், ஊடகத்தினரை கவரும் வகையில், சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு ‘செய்கை’களை மேற்கொண்டு, நூதனமாக வேட்புமனு தாக்கலில் ஈடுபட்டதால், ஈரோடு மாநகராட்சி அலுவலகம் களை கட்டியது.
குடும்பமே போட்டி… – மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி (45), அவர்களது மகள் சத்யா (24) ஆகிய மூவரும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
மாரியப்பன் கூறும்போது, ‘நான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவி துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பி. ஏ. பி. எட். முடித்து உள்ளார். நாங்கள் குடும்பத்தினருடன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கை சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே, இங்கு கை சின்னத்தில் வேட்பாளர் இருப்பதால், எந்த சின்னம் ஒதுக்கினாலும் அதில் போட்டியிட தயாராக உள்ளோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது எங்கள் நோக்கம்’ என்றார்.
10 ரூபாய் நாணயங்களாக டெபாசிட் தொகை… – திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் (61), வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் கூறும்போது, ‘ரிசர்வ் வங்கி பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகள் மற்றும் வெளியிடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள்.
இதனால், கட்டுத்தொகைக்காக, 10 ரூபாய் நாணயங்களாக ரூ 10 ஆயிரம் கொண்டு வந்துள்ளேன். நான் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர் கே நகர், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 3-வது தேர்தலாகும்’ என்றார்.
செருப்பாக இருப்பேன்… – கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது (63), செருப்பை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். செய்தியாளர்களிடம் நூர் முகமது கூறும்போது, ‘ நான் எம்பி. எம்.எல்.ஏ. வார்டு கவுன்சிலர் என பல்வேறு பதவிகளுக்கு 40 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது 41வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன். மக்களுக்காக நாயாக உழைத்து, அவர்கள் கால்களுக்கு செருப்பாக இருப்பேன் என்பதை உணர்த்துவதற்காக கழுத்தில் செருப்பு மாலை அணிந்து வந்துள்ளேன்’ என்றார்.
காந்தி வேடத்தில்… – நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (42) என்பவர், மகாத்மா காந்தி வேடத்தில் கையில் தராசுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவரும் ரூ 10 ஆயிரம் மதிப்பிலான, 10 ரூபாய் நாணயங்களை எடுத்து வந்திருந்தார். அத்துடன் கியூ. ஆர். கோடு மூலம் தனது பயோடேட்டாவையும் கொண்டு வந்திருந்தார். 10-வது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுவதாக ரமேஷ் தெரிவித்தார்.
தூண்டிலில் சிக்கப்போவது யார்? – மதுரையைச் சேர்ந்த சங்கர பாண்டியன்(38) என்பவர், கையில் போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் தூண்டிலுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். பணத்தை கொடுத்து அரசியல்வாதிகள் வாக்காளர்களை தூண்டிலில் பிடிப்பதை உணர்த்த இதனை கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம், ஊழல் லஞ்சத்தை ஒழிப்போம் , நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்பதுள்ளிட்ட பதாகைகளை அவர் எடுத்து வந்திருந்தார்.
தேர்தல் மன்னன்… – தேர்தல் மன்னன் என அழைக்கப்படும், சேலம் மாவட்ட்டம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன் (65), ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறும்போது, ‘தான் வேட்புமனு தாக்கல் செய்யும் 233வது தேர்தல் இதுவாகும். 1988ம் ஆண்டு மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக முதன் முதலில் களமிறங்கினேன்.
இதுவரை 32 எம்.பி.க்கள் தேர்தல், 6 தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். அதிக முறை தேர்தலில் போட்டியிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன்.
பின்னோக்கி நடந்துவந்து… – திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மனிதன் (55) என்பவர், பின்னோக்கி நடந்து வந்து வினோத முறையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவர் கூறும்போது, நான் உலக அமைதி வலியுறுத்தி, கடந்த 1991-ம் ஆண்டு முதல், பல லட்சம் கிலோ மீட்டர் பின்னோக்கி நடந்துள்ளேன். இதுவரை 32 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். நான் எப்போது இந்தியாவின் ஜனாதிபதி ஆகிறேனோ, அப்போது முதல் தான் முன்னோக்கி நடப்பேன்’ என்றார். இவர்கள் உட்பட மேலும் பல சுயேட்சை வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.
4 மனுக்களுக்கு அனுமதி: மாலை 3 மணி வரை மொத்தம் 11 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நிலையில், பத்மராஜன், நூர்முகமது , ரமேஷ் மற்றும் நாடாளும் மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் தனலட்சுமி, ஆகிய 4 பேரின் வேட்புமனுக்கள் மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்பட்டது. மற்றவர்களின் வேட்புமனுவில், திருத்தம் இருந்ததால், சரி செய்து எடுத்து வருமாறு திரும்பி அனுப்பப்பட்டனர்.
சுயேட்சை வேட்பாளர்களின் வித்தியாசமான செய்கைகளால் வேட்பு மனு தாக்கல் நடந்த ஈரோடு மாநகராட்சி அலுவலகமே கலகலப்பாய் காணப்பட்டது.