கடலூர்: வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மணடலம் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து திரிகோணமலைக்கு 380 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. முன்னதாக மணிக்கு 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் மணிக்கு 11 கிலோமீட்டர் என வேகம் குறைத்துள்ளது.
இதனால் பிப்ரவரி 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 5 நாட்கள் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் எச்சரிக்கை கூண்டு என்பது தூரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் இருக்கிறது என்ற அறிவிப்பதற்காக இந்த 1-எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் கடலில் 45 முதல் 52 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தேவனாம் பட்டினம், தாளம் குடா, சோனாங்குப்பம், உள்ளிட்ட 49 மீனவ கிராமத்தில் உள்ள அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடலில் உள்ள தங்குக்கடல் விசைப்படகுகள், பெரிய படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களுக்கும், இறங்குதளங்களுக்கும் பாதுகாப்பாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெரிதளவு பாதிப்பு இல்லை என்றாலும், அனைத்து மீனவர்களும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.