
வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி
1979ம் ஆண்டு வெளிவந்த குடிசை படத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜெயபாரதி. முதன் முறையாக சென்னை சேரிப்பகுதியில் வாழும் மக்களை பற்றி வெளிவந்த படம் இது. இதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்த கமலா காமேஷ் கதை நாயகியாக நடித்தார். பல விருதுகளை பெற்ற படம் இது. அதன்பிறகு ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் ஐந்து, உச்சிவெயில், நண்பா நண்பா, குருஷேத்திரம் உள்பட பல படங்களை இயக்கினார். கடைசியாக 2010ம் ஆண்டு புத்திரன் என்ற படத்தை இயக்கினார். இதில் சங்கீதா கதையின் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதை பெற்றது.
அதன்பிறகு ஜெயபாரதி படம் எதுவும் இயக்கவில்லை. இந்த நிலையில் அவர் மிகவும் வறுமையில் வாடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பாலுமகேந்திரா நூலகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது:
குடிசை ஜெயபாரதி, எண்பதுகளில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் . இன்று உடல் நிலை பாதிக்கப்பட்டு தீராத வயிற்று வலியாலும் இதர உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறார். அதற்கு தேவைப்படும் மருந்துகள் வாங்ககூட பணமில்லாமல் அவதிப்படுகிறார். கொளத்தூரில் மனைவியுடன் தனியாக வசித்துவரும் குடிசை ஜெயபாரதியின் நிலை வருத்தமுறச் செய்கிறது. எண்ணிக்கையில் குறைவான படங்களை இயக்கியிருந்தாலும் மாற்று சினிமா எடுப்பேன் என பிடிவாதமாக இயங்கியவர்.
மாற்று சினிமாவுக்காக கருத்தரங்கம் நடத்தும் பண்பாட்டு அக்கறை கொண்ட தமிழக அரசு இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு இன்று நலிவுற்று இருக்கும் படைப்பாளிகளின் இறுதிக்கால மருத்துவ செலவுக்காக ஏதேனும் அக்கறை எடுத்துக்கொள்வது அந்தப் பாதையில் பயணிப்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குடிசை ஜெயபாரதிக்கு செய்யும் பொருளாதார உதவி அவரை நெருக்கடியான உடல் நிலையிலிருந்து ஓரளவு காப்பாற்றக்கூடும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.