சேலம்: சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் நாய் வளர்ப்பவர்கள், தங்களது வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறைக்கு வரவுள்ளது. சாலையில் விடப்படும் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கும் திட்டமும் அமலாகவுள்ளது.
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆணையர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தின்போது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவற்றின் குட்டிகள் தெருவில் விடப்படுவதாலும், தெருநாய்களின் பெருக்கம் அதிகமாகிறது. வளர்ப்பு நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்படாதது, முறையாக பராமரிக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால், ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது.
சேலம் மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்ட உரிமம் வழங்கும் நடைமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தமிழ்நாடு நகர்ப்புற விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1997-ன் படி, வளர்ப்பு நாய்களுக்கு சென்னை மாநகராட்சியில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போல, சேலம் மாநகராட்சியிலும் ரூ.50 கட்டணம் செலுத்துவதன் பேரில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கும் முறை, நடைமுறைக்கு வந்துள்ளது. நாய் வளர்ப்புக்கான உரிமம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை செல்லுபடியாகும். நடைமுறைகளைப் பின்பற்றி, உரிமத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.