மத்திய பட்ஜெட் 2023 நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ஓரிரு வாரங்களில் தமிழகத்திலும் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சென்னை ஆர்கே சாலையில் உள்ள தனியார் விடுதியில் 2030 ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும் சுழலமைப்பை உருவாக்குதல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்து கொண்டார்.
தமிழக பொருளாதாரம்
அப்போது நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ” தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக மாற்றுவதில் உலக பொருளாதார நிலையின் பங்கும் இருக்கிறது. அதன் இலக்கை அடைய பல்வேறு காரணிகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. உலகப் பொருளாதாரம் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பி இருக்கிறது. மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரிய எதிர்பார்ப்பு
அதன் தொடர்ச்சி தான் நான் முதல்வன் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டன. 2006 முதல் 2011 காலகட்டத்திற்குப் பிறகு 2011 முதல் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் வரை மாநிலத்தின் ஜிடிபி என்பது 23.7 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக குறைந்தது. அதிமுக ஆட்சி என்பது மட்டுமல்லாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு காரணங்கள் இதற்கு இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்போல இந்த பட்ஜெட்டிலும் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருக்காது. வளர்ச்சியை அடைய புதிய வழிகளை இன்று தேட வேண்டும். அதற்கு இம்மாதிரியான கருத்தரங்கங்கள் முக்கிய வழிவகுக்கும்” என்றார்.