தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, ஜனவரி 1 ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
திமுக ஆட்சி அமைந்தது முதல் தொடர்ந்து பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு பின்னால், பல முக்கிய காரணங்கள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பணியிட மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி, செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரனும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக மேகநாத ரெட்டியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமரகுருபரனும், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக லட்சுமி பிரியாவும், தொழில்துறை சிறப்புச் செயலாளராக பூஜா குல்கர்னியும், பள்ளிக்கல்வித்துறை சிறப்புச் செயலாளராக ஜெயந்தியும், தாம்பரம் மாநகராட்சி ஆணையராக அழகு மீனாவும், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக விஷ்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விழுப்புரம் ஆட்சியராக பழனி, திருநெல்வேலி ஆட்சியராக கார்த்திகேயன், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஶ்ரீதர், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி, தேனி ஆட்சியராக ஷாஜீவனா, கோவை ஆட்சியராக கிராந்தி குமார், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரனும், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப்பும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அதிகாரிகள் பற்றிய தகவல்கள் சென்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதிகாரிகளின் செயல்திறன், தனித்தன்மை, அந்தந்த இடங்கள் மற்றும் துறைகளின் தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் காலங்களில் இன்னும் சில மாற்றங்களையும் எதிர்ப்பார்க்கலாம் என கூறப்படுகின்றது.