அரசாங்க செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், note to the cabinet என்ற பெயரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு விசேட விளக்கமொன்றை வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்….
அரசாங்கத்தின் செலவுகளுக்கு ஏற்றவாறு போதியளவு வருமானத்தை ஈட்ட முடியாத நெருக்கடி நிலை குறித்து கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரிக்கும். அதுவரை இந்த நிலைமையை கையாள வேண்டும்.
மேலும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அது தொடர்பில் அவ்வப்போது விளக்கமளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், ஒவ்வொரு அமைச்சின் செயலாளர்களும் அவர்களது அமைச்சின் செலவீனங்களை நிர்வகிப்பதற்குக் கட்டுப்பட்டுள்ளனர். உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம், கலால் திணைக்களம் மற்றும் வருமானம் பெறும் பிற நிறுவனங்களில் இருந்து, ஜனவரி மாதத்தில் மாத்திரம் 158.07 பில்லியன் வருமானம் பெறப்பட்டுள்ளது.
அரசாங்க செலவீனங்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தினால் எமக்கு அது குறித்து பரிசீலிக்க முடியும். ஜனவரி மாதத்தில் மொத்த வருமானமாக 158.07 பில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ள நிலையில், 367.08 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாடு மிகவும் இக்கட்டான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த அரசாங்கங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடன்களை பெற்றும் நாட்டினுள் பணத்தை அச்சிட்டும் இந்த நிலைமையை எதிர்கொண்டனர். ஆனால் தற்போது வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.
Mohamed Faizul