அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்.. எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கும் 2023-24 மத்திய பட்ஜெட்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2023- 24ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒட்டுமொத்த உலகமே இந்திய நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்குவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாகவும் அடுத்தாண்டில் 6.5%ஆகவும் இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின் 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். இதுவே இந்திய வரலாற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையாக கருதப்பட்டது. 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வெறும் 92 நிமிடங்களில் மத்திய பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் நிதியமைச்சர்.
image
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டான 2023-24ஆம் ஆண்டு பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டானது உலக அளவில் கவனத்தை பெறுகிறது. மேலும், உலகின் வேகமாக வளரும் நாடாக இந்தியா தொடரும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. விலைவாசி நிலவரம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பிற்குள் வந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சூழல்களால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இது மாதந்திர வசூலில் இரண்டாவது அதிகபட்ச தொகை என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.