சரக்கு லாரிகளில் அதிகாரம் ஏற்ற அரசு ஊக்குவிப்பதை கண்டித்து இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மணல் லாரி உரிமையாளர் சங்கம் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் பேசியதாவது “தமிழகத்தில் நாள்தோறும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு அதிகமாக லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றுவது தான்.
கனிம வளங்களை முறைகேடக கொள்ளை போவதோடு சாலைகளும் லாரிகளும் பாதிக்கப்பட்டு விபத்துகள் அதிகரிக்கின்றன. இதனை தடுக்கும் வகையில் கூடுதலாக ஏற்றப்படும் ஒவ்வொரு டன் எடைக்கும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.
லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் அதிக பாரம் ஏற்ற மறுத்து வருகின்றனர்.
ஆனால் கனிமவள ஒப்பந்தம் எடுத்துள்ளோர் சொந்தமாக லாரி வாங்கி முறைகேடாக பல லட்சம் டன் கனிம வளத்தை கொள்ளையடிக்கின்றனர். இதற்கு உடந்தையாக காவல் துறையினரும் போக்குவரத்து துறையினரும் லஞ்சம் பெற்றுக்கொண்டு லாரிகளில் ஏற்றும் கூடுதல் பாரத்தை கண்டு கொள்வதில்லை.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரி அதிக விபத்துக்கள் நடக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மணல் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.