சென்னை: நிலையான வளர்ச்சிக்கு கல்விதான் சிறந்த கருவியாகும். அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து தரமான கல்வியை உருவாக்க வேண்டும் என்று ஜி20 கல்வி மாநாட்டில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தினார்.
உலக அளவில் பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பதற்காக ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா உள்ளிட்ட 20 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2022-23-ம் ஆண்டு மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் பல்வேறு துறைகளின் சார்பில் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. அதன் ஒருபகுதியாக கல்வித்துறை சார்பிலான ஜி20 கல்விக்குழு மாநாடு சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது.
அனைத்து தரப்புக்கும் பலன்: இதன் தொடக்க விழாவில் மத்திய உயர்கல்வித் துறை செயலர் கே.சஞ்சய் மூர்த்தி பேசும்போது, “நம்நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேநேரம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. இவற்றை குறைக்கதேசியக் கல்விக் கொள்கை உதவும்.கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், அதன் பலன்கள் கிராமம், நகரம் எனபாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.
ஜி20 அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி கல்வியின்தரத்தை மேம்படுத்தியுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் மூலம் கல்விவளர்ச்சியில் அனைத்து நாடுகளுக்கும் உள்ள பொதுவான இலக்குகளை விரைவாக அடைய முடியும்”என்றார்.
அதன்பின் ‘கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு’ எனும் தலைப்பில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசியதாவது: ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் டிஜிட்டல் கல்வியில் சிறந்து விளங்குகின்றன. நெதர்லாந்து மென்பொருள் கல்வியில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த நாடுகள் தங்கள் மாணவர்களுக்காக மெய்நிகர் வகுப்பறைகளை அதிக அளவில் உருவாக்கியுள்ளன.
கரோனா தொற்று காலம் கல்விக்கு பெரும் சவாலாக இருந்தது. அந்த நேரத்தில் அனைவருக்கும் கல்வி வழங்க தொழில்நுட்பம் பேருதவியாக இருந்தது. சீனா 20 ஆயிரத்துக்கும் அதிகமான உயர்கல்வி பாடங்களை கொண்டுள்ளது. இதனால் உயர்கல்விக்கான தளமாக சீனா மாறி வருகிறது.
அதேபோல், இந்தியாவும் தேசிய கல்விக் கொள்கை- 2020 மூலம் அனைவருக்கும் தரமான கல்வியை கொடுத்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. புத்தாக்கம், புது சிந்தனை, திறன் மேம்பாடுஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி நவீன ஸ்டார்ட்அப் கொள்கையை உருவாக்கியுள்ளது. தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. எனினும், நம்நாட்டில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்கள் தனியார் கல்லூரிகளாக உள்ளன. அதனால் அனைவருக்கும் கல்வி சென்று சேருவதில் சிரமங்கள் உள்ளன. அதை சரிசெய்ய வேண்டும். நிலையான வளர்ச்சி பெற கல்விதான் சிறந்த கருவியாகும். எனவே, அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கண்காட்சி அரங்குகள்: ஜி20 மாநாட்டை முன்னிட்டுஐஐடி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் தமிழக கல்வித்துறையின் நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவற்றின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் ஸ்வையம், தீக் ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உப கரணங்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் கண்காட்சியில் தங்கள் நாடுகளில் கல்வியில் உள்ள நவீன வசதிகள், திட்டங்கள் குறித்த அரங்குகளை அமைத்துள்ளன.
குறிப்பாக இ-பிளேன் எனும் சிறிய ரக விமான டாக்சி, முதுகுதண்டு அறுவைச் சிகிச்சை பயன்பாட்டுக்கான தானியங்கி ரோபோ, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 150 திறன் படிப்புகளை இணைய வழியில் வழங்கும் ‘கூவி’ ஸ்டார்ட் அப் அமைப்பின் அரங்குகள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
ஜி20 கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை நாளை வரை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்குறள் மேற்கோள்: ஐஐடி இயக்குநர் காமகோடி தனது பேச்சின் நிறைவில் ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் -கண்ணென்ப வாழும்உயிர்க்கு’ எனும் திருக்குறளை மேற்கோள்காட்டி எண்ணும், எழுத்தும்தான் கல்வியை மேம்படுத்தும் என்று கூறியது பார்வை யாளர்களை ஈர்த்தது.