சாலைகளில் ஓடும் மிகவும் பழைய, கரும்புகை மூலம் மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கழித்துக்கட்டுவதே ‘பழைய வாகன அழிப்புக்கொள்கை’யின் நோக்கமாகும். ஸ்கூட்டர், பைக், கார் உள்ளிட்ட தனி நபர் வாகனங்கள் 20 ஆண்டுகளும் லாரி உள்ளிட்ட வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகளும் ஓடியிருந்தால் அவை கட்டாயம் பரிசோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாகனங்கள் மோசமான நிலையில் இருந்தால் அழிப்புக்கு அனுப்ப அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள். அவ்வாகனங்கள் பயன்பாட்டுக்கு உரியவை என தெரியவந்தால் கூடுதலாக 5 ஆண்டுகாலம் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்பட்டு பிறகு, மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தி கழித்துக்கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
2070-ம் ஆண்டிற்குள் முற்றிலும் கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை எட்டுவதை இலக்காகக் கொண்டு, திட்டங்களை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்காக பழமையான வாகன அழிப்புக் கொள்கையை பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
இதன்மூலம், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என தெரிவித்துள்ள அவர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எத்தனால், மெத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.