ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகேயுள்ள அரசு பள்ளியில் கழிவறையை, மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள், பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவர்கள், கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து, கழிவறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்கின்றனர். இதேபோல மாணவிகள் சிலர், பள்ளி வளாகத்தை கூட்டி பெருக்குவதுடன், ஒட்டடை அடிக்கும் காட்சிகளும் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தகவலறிந்த தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜனகராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் கூறுகையில், ‘‘அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.