ஆண்டிமடம் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள கடைவீதி பகுதிகளில் மழைக் காலங்களில் மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் நடுரோட்டில் கடை முன்பு முழங்கால் அளவு மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீமுஷ்ணம் ரோடு சண்முகா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் தொடங்கி காடுவெட்டி பிரிவு சாலை வரை ரோட்டின் இரண்டு புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் மீது கான்கிரீட் சிலாப் போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் வியாபார நிறுவனங்களின் முன்பு வடிகால் வாய்க்கால் மீது கான்கிரீட் சிலாப் போடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. ரோட்டின் ஓரத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்களை குழாய் இணைத்து இந்த புதிய மழைநீர் வடிகால் வாய்க்காலில் இணைக்கப்பட்டுள்ளதால் வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பணி நிறைவு பெறாததால் வியாபார நிறுவனங்கள் முன்பு, தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்தபடி சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் தற்போது பெய்த மழையால் மேலும் மழை நீரும் சேர்ந்து கொண்டு ஓட வழியில்லாமல் நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் வியாபாரிகளின் இந்த மழை நீர் வடிகால் வாய்க்கால் கட்டாமல் இருந்தபோது மழைக்காலங்களில் மழைநீர் மட்டும் தான் தேங்கி நின்றது.
தற்போது இந்த வடிகால் வாய்க்காலில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. வியாபார நிறுவனங்கள் முன்பு உள்ள வாய்க்கால் மீது கான்கிரீட் சிலாப் போடும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.