விசாகப்பட்டினம்: ஆந்திராவின் புதிய தலைநகரமாக விசாகப்பட்டினம் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆந்திர மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த விஷயம்தான் தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது: மார்ச் மாதம் 3, 4-ம் தேதிகளில் விசாகப்பட்டினம் நகரில் அனைத்து முதலீட்டாளர் களின் மாநாடு நடைபெற உள்ளது.
மேலும், விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக மாற உள்ளது. நானும் கூட விரைவில் விசாகப்பட்டினத்துக்கு குடிபெயர உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
இவ்வாறு இவர் கூறிய சில நிமிடங்களில் அமராவதியில் அமையும் புதிய தலைநகருக்காக தங்களது நிலத்தை அரசுக்கு வழங்கிய விவசாயிகள், தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர், விவசாய, மாணவர் அமைப்பினர் என பல தரப்பட்டவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் விசாகப் பட்டினம் நகரில் இருந்தே ஆட்சி நடக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறிய தாவது: சில சட்ட ரீதியான பிரச்சினைகளை முடித்து விட்டு, வரும்ஏப்ரல் மாத இறுதியில் இருந்தேவிசாகப்பட்டினத்தில் ஆட்சி நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. தேவையான அரசுஅலுவலகங்கள் விசாகப்பட்டினத் தில் உள்ளன. தேவைப்பட்டால் தனியார் கட்டிடங்களை வாட கைக்கு எடுத்து அதில் அரசு பணிகள் நடைபெறும். பீமிலி நெடுஞ்சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முதல்வரின் தற்காலிக வீடு மற்றும் அலுவல கமாக செயல்படும். அதன் பின் னர், நிதானமாக அனைத்தும் கட்டிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
2014-ல் ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலங்கானா என பிரிக்கப்பட்டது. அப்போது தெலங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் செயல்பட்டது. ஆந்திராவுக்கு அமராவதியில் தலைநகரம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
3 தலைநகரங்கள் அறிவிப்பு: 2019-ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி வந்தபோது அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் என3 தலைநகரங்கள் அறிவிக்கப் பட்டன. நீதிமன்ற உத்தரவால் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது.