வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இப்போது ஆசிரியையாக பணி புரியும் என் சிறு வயது தோழியின் கிராமத்திற்கு ரெண்டு நாள் பயணமாக சென்றிருந்தேன். சிறு வயது கதைகள் பேசி சிரித்து மகிழ்ந்து நல்ல உணவருந்தி மதியம் ஒரு சின்ன தூக்கம் போட்டு எழும்பினோம். பின் மதியம் நாலு மணிக்கு சுடச்சுட லோட்டா நிறைய காபியுடன் வீட்டின் முகப்பில் வேப்ப மர நிழலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
திடீரென தெருவே ஏக பரபரப்பாக மாறி விட்டது. கிட்டத்தட்ட எல்லா வீட்டுப் பெண்களும் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள். நடுவில் ஒரு இளவயது ஆண் ஒருவன் சாதாரண வெள்ளை வேட்டி சட்டையில் நின்று கொண்டிருந்தான். சில பல ஆண்கள் வேக நடையில் அங்கு வந்து சேரவும் கூடியிருக்கும் பெண்கள் பெருங்குரல் எடுத்து பேச தொடங்கி விட்டார்கள்.
என்ன இது? யார் அந்த ஆள்? இங்கே என்ன நடக்கிறது? என்பது போன்ற என் கேள்விகளுக்கு இதோ வரேன் என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லி விட்டு என் தோழி விரைந்து மறைந்தாள். சற்று நேரம் கழித்து வந்தவள் விஷயம் சொன்னாள்.
அந்த இளவயது ஆணின் பெயர் ராஜாக்கிளி. படிப்பறிவில்லாதவன். வெளிநாட்டிற்கு உடல் உழைப்பு தொழிலாளியாக வேலைக்கு சென்று கொஞ்சம் பணம் சேர்த்து கொண்டு ஊருக்கு திரும்பியிருக்கிறான். தொழில் தொடங்கப் போகிறேன் என்று ஒரு பெண்மணியிடம் கொஞ்சம் பணம் பத்து வட்டிக்கு வாங்கியிருக்கிறான்.
முதல் மூன்று மாதம், சொன்ன தேதியில் அதிகாலை டான் என்று கதவைத் தட்டி வட்டியை கொடுத்து கொண்டே இருந்திருக்கிறான். ஓ, இன்னைக்குத் தான் நீ வர்ற நாள் இல்லே. மறந்தே போச்சு. ஆனா நீ மறக்காம வந்துடரே என்று, அலட்டிக் கொள்வதைப் போல, அலட்டாமல் அலட்டி, உள்ளூர மகிழ்ந்து அந்த பெண் இன்னும் தன்னிடம் இருந்த சேமிப்பைக் கொடுத்திருக்கிறாள். அவனும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என எச்சரிக்கையுடன் வட்டியை தவறாமல் தந்திருக்கிறான். நல்லவைகளை தான் மட்டுமே அனுபவிக்க எண்ணுவது மனித இயல்பு தானே! விஷயத்தை வெளியே மூச்சு விடுவாளா என்ன!
என்ன உன் வீட்டுக்கு ராஜாக்கிளி அடிக்கடி வந்து போகிறானே என்று அடுத்த வீட்டுக்காரி கேட்கவும், விஷயம் விபரீதமாகி விடுமே, கிராமத்தில் தன் பேரில் அபவாதமாய்ப் போகுமே என்று வேறு வழியில்லாமல் விஷயத்தை இப்படி இப்படி என்று சொல்லியிருக்கிறாள்.
அவ்வளவு தான்.. இப்படி இப்படி என்று அவள் சொன்ன விஷயம் பூராவும் அப்படி அப்படியென்று ஊர் பூராவும் பரவி விட்டது. அடுத்த ஒரு மாதத்திற்குள் அந்த கிராமத்துப் பெண்கள் அவனிடம் ஏகப்பட்ட பணத்தை கொடுத்துள்ளனர்.
புருசனுக்கு தெரியாமல் பொண்டாட்டியும், அவளுக்கு தெரியாமல் இவனும்,. சிறுவாட்டுப் பணம், பித்தளை பாத்திரங்கள் ஆடு மாடு நகைகள் எல்லாம் விற்று கொடுத்துள்ளனர். வீட்ல இருக்கிற அறைகலன்கள் தான் மிச்சம். இதில் ஒருத்திக்கு வீட்டு திண்ணையில் நகர மாட்டாமல் உக்காந்திருக்கும் மாமியாரை யாராவது விலைக்கு வாங்கினால் நன்றாகயிருக்குமே என்று எண்ணம் ஓடத் தான் செய்தது.
பின்னே என்ன! “இதெல்லாம் நல்லதற்கல்ல. ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அவன் உன்னை ஏமாத்திட்டு போய்டுவான்” என்று அனுபவத்தில் சொன்னவளை மருமகளுக்கு பிடிக்குமா என்ன? ஆனால் என்ன செய்ய? கிழவியை கேட்பாருமில்லை. கொள்வாருமில்லை. பத்து வட்டி என்றால் சும்மாவா? இதில் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாதவர்களும் ஆசிரியையான என் தோழியும் தான் தள்ளுபடி.
சும்மா சொல்ல கூடாது. வீடு தேடி வந்து வட்டிப்பணம் கொடுத்து செல்லும் ராஜாக்கிளி அந்த கிராமத்திற்கே, கிளியில்லாமல் வெறும் ராஜாவாகிப் போனான். ராஜாதிராஜனாகிப் போனான். என் மகளுக்கு கல்யாணம் வெச்சிருக்கு. கொஞ்சம் பணம் வேணும் என்றுஒரு வார்த்தை சொல்லி விட்டால் போதும் அவர்கள் கேட்ட பணத்துடன் தன் மொய் பணமாக ஒரு பெரும் தொகை கொடுத்து வள்ளலாய் உயர்ந்து நின்றான்.
ஒரு வருடம்…
நோ வட்டி
நோ அசல்
போயே போச்சே..!
யாருக்கும் பணம் வரவில்லை. ஆளும் இல்லை. கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து. ஆத்தை விட்டு பறந்து போயிடுத்து.
இன்று தான் அகப்பட்டிருக்கிறான். அவனை பிடித்துக் கொண்டு போனவர்கள் இன்னும் ஊர் திரும்பவில்லை. மாலை நான் என் வீட்டிற்கு திரும்பி விட்டேன். ஆனாலும் மனதிற்குள் ராஜாக்கிளி உட்கார்ந்து கொண்டு அடம் பிடிக்கிறான் இறங்க மாட்டேன் என்று. அவனைப் பற்றியும் அவன் ஊரைப் பற்றியும் மனதில் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது எனக்கு.
ராஜாக்கிளியின் கிராமம், தமிழகத்தின் ஏனைய கிராமங்களைப் போலிருக்காது. அது ஒரு மினி ஜப்பான். கிராமத்து ஆண்கள், வெளிநாட்டில் சம்பாதித்து கோடிகளில் கட்டிய வீடுகள், அனைத்து நவீன மின் உபகரணங்கள் புதிய ரக வாகனங்கள் என அமர்க்களமாக இருக்கும். அப்படிப்பட்ட கிராமத்தில் தான் ராஜாக்கிளி என்னும் படிப்பறிவே இல்லாத ஒருவன் வட்டித் தொழில் செய்யப் போகிறேன் என்று எல்லோரிடமும் பணம் பெற்றிருக்கிறான். அவரவர் நகை நட்டு தட்டுமுட்டு அத்தனையும் விற்று அவனிடம் கொடுத்திருக்கின்றனர். சும்மா ஒன்றுமில்லை. பத்து வட்டிக்கு அய்யா பத்து வட்டிக்கு. எல்லாவற்றுக்கும் ஆசைப்பட சொன்ன மாடர்ன் சாமியார் கூட பேராசை பட சொல்லவில்லை.
முதலில் ஐந்து வட்டிக்குத் தான் பணம் வாங்கி தொழில் ஆரம்பித்தான் ராஜாக்கிளி. அவனிடம் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் இரண்டே இரண்டுபேர் தான். டவுனில் இதேப் போல் பைனான்ஸ் பார்ட்டி தான். இவன் கேட்காமலே பத்து வட்டி கொடுக்கவே ராஜாக்கிளிக்கு ஊரில் டிமாண்ட் கூடி நிறைய பணப்புழக்கம் ஆகிப் போச்சு. மொத்த பணத்தையும் சினிமா துறையில் முதலீடு செய்கிறோம் என்று ஆசை காட்டி ஆட்டையைப் போட்டு விட்டார்கள் அந்த இருவரும்.
ஊரில் பணம் வாங்கியவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
என்ன செய்ய?
ஒரு ஆளிடம் முதலீடு பெற்று பத்து பேருக்கு வட்டி கொடுக்கவேண்டியது.
எத்தனை நாள் இந்த பருப்பு வேகும்? ராஜாக்கிளி தலைமறைவு ஆகி விட்டான்..
இவன் சாதாரண படிப்பறிவு இல்லாத தமிழன். நீரவ் மோடி போன்ற குஜராத்தியோ அன்றி மல்லையா போன்று கர்நாடகாகாரனோ அல்லவே நாட்டை விட்டு தப்பித்துப் போக. பெரிய பின்புலமும் இல்லை. உடல்நிலை சரியில்லாத தாயை பார்க்க வந்தான். இதோ சிக்கினாண்டா சிவனாண்டி.
இது வரை எனக்குத் தெரியும். மீதிக் கதை என்னைப் பார்க்க வந்த தோழியிடம் ராஜாக்கிளியின் மீதிக் கதையைக் கேட்டேன்
ஆளாளுக்கு மொத்த, அவர்களை டவுன் பைனான்சியரிடம் அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் இவன் பொண்டாட்டியா என்ன. வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க. பஞ்சாய் பறந்து புகையாய் மறைந்து விட்டனர்.
உன் வீட்டுக்கு வா. உன் பொண்டாட்டி நகையோ துணியோ மணியோ எது இருந்தாலும் அதை நாங்கள் எடுத்து கொள்கிறோம் என சிலர் அவன் வீட்டுக்கு போனார்கள்.
ஹய்யோ. அந்தோ பரிதாபம். கொடுமை கொடுமைன்னு மாமியா வூட்டுக்கு போனா அவ ஈச்சம் பாயை சுத்திக்கிட்டு எதிர்ல வந்தாளாம். மழைக்கு ஒழுகும் சின்ன குடிசை வீட்டில் கழுத்தில் மஞ்ச கயித்தோட அவளும் கன்னம் குழி விழுந்த குழந்தைகளும் பஞ்சையாய் பராரியாய் தாயும்…
என்ன கொடுமை சரவணன்?
வீராப்பாக போனவங்க தான் மனம் நொந்து தங்கள் பையில் இருந்த காசை அவர்கள் கையில் கொடுத்து வந்தார்கள். என்ன தான் இருந்தாலும் எங்களுக்கு மனுஷத்தன்மைன்னு ஒண்ணு இருக்குல்ல என்று கண்களில் வழிய தொடங்கிய கண்ணீரை மூக்கால் உறிஞ்சியபடி.
எது எப்படியோ மலேசியா சிங்கப்பூர் என்று நாடு விட்டு போய் சம்பாதித்துக் கொண்டு வந்து அலப்பறை செய்தவர்கள் இன்று அமைதியாக வந்து போய் கொண்டிருக்கிறார்கள். படிப்பறிவில்லாத ஒருவனிடம் ஏமாந்து போய் விட்டோம் என்று வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஒன்றுமே நடவாவது போல இயல்பாக இருக்கிறது கிராமம்.
என் தோழி கதையை சொல்லி முடித்தாள்.
எப்படியோ ராஜாக்கிளி ஊரையே சமத்துவமாக்கி விட்டது என்றேன் நான்.
சரி தானே!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.