வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால் பிப்ரவரி 1,2-ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
“தென்கிழக்கு வங்கக்கடலிலும், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவாக நீடித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஜனவரி 31, 11:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிருந்து கிழக்கே சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது ஜனவரி 31 மாலை வரை மேற்கு வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு தென்மேற்கு திசையிலும் நகர்ந்து பிப்ரவரி 1 அன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்க கூடும்.
இதனால் இன்று தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமாரி, ராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. நாளை கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வலைகுடா, தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக மழைக்காலம் முடிந்தாலும் இவ்வாறான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்கிறது. இதற்கான காரணங்களை வானிலை அறிஞர் கீதாவிடம் ( சென்னை வானிலை மையம்) கேட்டோம். அவர் “1891- 2021 இடைப்பட்ட ஆண்டுகளில் வங்கக்கடலில் பிப்ரவரி மாதம் மட்டும் ஆறு தடவை காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மழைக்கால தொடர்ச்சியே. கடலில் உள்ள வெப்ப அழுத்தத்தாலும், ஒரு சில அலைகளின் தாக்கத்தாலும் இவ்வாறு நடக்கலாம். இதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கு என்றும் , இல்லை என்றும் உறுதியாக சொல்லிவிட முடியாது” என்றார்.
1891 – 2021 இடைப்பட்ட காலங்களில் 1944 ம் ஆண்டு பிப்ரவரி 29, 1947-ம் ஆண்டு பிப்ரவரி 25, 1956-ம் ஆண்டு பிப்ரவரி 9, 1961-ம் ஆண்டு பிப்ரவரி 19 , 1999-ம் ஆண்டு பிப்ரவரி 1, 2011-ம் ஆண்டு பிப்ரவரி 2, ஆகிய தினங்களில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.