கொழும்பு, இலங்கையில், 2019 ‘ஈஸ்டர்’ தினத்தன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல்களில் 270 பேர் உயரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன மன்னிப்பு கோரினார்.
நம் அண்டை நாடான இலங்கையில், 2019 ஏப்., 21ல் நடந்த ஈஸ்டர் தின கொண்டாட்டங்களின் போது, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத குழுவை சேர்ந்த ஒன்பது பேர், மனித வெடிகுண்டாக செயல்பட்டு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்தும், அலட்சியமாக செயல்பட்ட அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதிபர் சிறிசேனாவின் அலட்சியமே தாக்குதல்களுக்கு காரணம் என, வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது. அப்போது, வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு 2.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, சிறிசேனாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்க தவறினால், நீதிமன்ற அவமதிப்பில் சிறை தண்டனை விதிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2019 ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, கத்தோலிக்க கிறிஸ்துவ சமூகத்தினரிடம் மன்னிப்பு கோருவதாக, முன்னாள் அதிபர் சிறிசேன நேற்று தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement