ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக தரப்பில் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாமல் தாமதமாகி வந்தது. அதிலும் ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்களை நிறுத்த
எடப்பாடி பழனிசாமி
,
ஓ.பன்னீர்செல்வம்
என போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டனர்.
தீவிர ஆலோசனை
இதற்காக பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இருதரப்பும் மாறி மாறி ஆதரவு கேட்டன. கடந்த சில நாட்களாக ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் களப் பணியாளர்கள் உடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தான் எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசு அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த தென்னரசு?
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த இவருக்கு வயது 65. 1988ஆம் ஆண்டு முதல் நகர அதிமுக செயலாளராக பதவி வகித்தார். இதையடுத்து 1992ல் இணை செயலாளராகவும், 1995ல் மீண்டும் நகர செயலாளராகவும் இருந்துள்ளார். 2001 மற்றும் 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் ஈரோட்டில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார். அதில் 2016ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
வகித்த பதவிகள்
அப்போது திமுக வேட்பாளர் சந்திரகுமாரை 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக பதவி வகித்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து கொண்டிருக்கிறார். மேலும் தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர் பதவியும் வகித்து வருகின்றார்.
தேர்தல் பணிமனை திறப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றைய தினம் தொடங்கியது. இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செங்கோட்டையன், மகிழ்ச்சியான செய்தி காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, இன்றைய தினம் ஈரோடு கிழக்கில் தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது.
சூடுபிடிக்கும் பிரச்சாரம்
அதில் தேர்தல் பணிக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதனுடன் எடப்பாடி தரப்பின் அதிமுக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இனி அதிமுக தரப்பிலும் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் பாஜக தரப்பில் இருந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளில் யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கப்படவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த எடப்பாடி தரப்பு தன்னிச்சையாக களமிறங்கி தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதை பார்க்க முடிகிறது.